உள்ளூர் செய்திகள்

நேச்சுரோபதிஇயற்கை மருத்துவம்

 மாற்று மருத்துவ முறைகள் பல இருந்தாலும் இவற்றுள் பழமையானதும் இன்றும் இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் நாடப்படுவதுமாக இருப்பது இயற்கை மருத்துவம் எனப்படும் நேச்சுரோபதி தான். இம் முறை 19ம் நூற்றாண்டிலிருந்தே அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இயற்கை தந்துள்ள ஒளி, நீர்,வெப்பம் ஆகியவற்றோடு உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், உடல் கூறியல் அம்சங்களை உபயோகித்து மனிதனுக்கு வரும் நோய்களிலிருந்து குணம் தரும் மருத்துவப் பிரிவு தான் நேச்சுரோபதி ஆகும். புகழ் பெற்ற மருத்துவ அறிவியல் விஞ்ஞானியான ஹிப்போகிரடிசின் குணப்படுத்துவது இயற்கை தான், மருத்துவர்களல்ல என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இது மருந்துகளால் ஆளப்படும் துறையல்ல. நாம் வாழும் முறையை இயற்கையுடன் ஒன்றிணைப்பது. Natural cure, Natural method, New Science of healing, Healing from within என்னும் பல்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வயிறு உபாதைகளுக்கு உண்ணாமல் இருப்பது, நீரை ஒரு குணப்படுத்தும் கருவியாக உட்கொள்வது, அர்த்தமுள்ள உணவு முறையை ஏற்றுக் கொள்வது போன்றவை இம் மருத்துவ முறையின் சில நடைமுறைகளாகும். நமக்கு நோய் வர காற்று, நீர் மற்றும் உணவு போன்ற இயற்கைக் காரணங்களில் ஏற்படும் சமநிலையற்ற தன்மை தான் காரணம் என்று ஹிப்போகிரடிஸ் கூறினார். முறையற்ற வாழ்க்கை முறையே மனிதருக்கு வரும் பல்வேறு உபாதைகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அறவே ஒதுக்குவது, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேட் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது, புகைப்பிடித்தல் மற்றும் மது குடிப்பதை நிறுத்துதல், அதிக மன அழுத்தத்தைக் குறைத்து களைவது போன்ற முறைகளை நேச்சுரோபதி வலியுறுத்துகிறது. நமது வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி, நல்ல உணவுப் பழக்கம், இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலமாக நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கலாம் என்று இத் துறை நம்புகிறது. மனித உடலுக்கே நோயை விரட்டும் தன்மை இருப்பதையும் இத் துறை நம்புகிறது. எனவே இம் மருத்துவ முறையில் மருந்தில்லா மற்றும் ரத்தம் சிந்தா முறைகளே கையாளப்படுகின்றன. எனினும் நோயின் தீவிரத்தையும் தேவையையும் பொறுத்து இயற்கை மருந்துகளையும் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்வதை இதில் காணலாம். பொதுவான நோய்களான தலைவலி, ஜலதோஷம், ரத்த அழுத்தம், பெப்டிக் அல்சர், வயது தொடர்பான உபாதைகள், சர்க்கரை வியாதி போன்ற நோய்களை இந்த மருத்துவ முறைகள் மூலமாக வரவே விடாமல் தடுக்கலாம். மொத்தத்தில் நோயில்லாத வாழ்க்கை முறையை நேச்சுரோபதி கற்றுக் கொடுக்கிறது. பணி வாய்ப்புகள்: நேச்சுரோபதி மருத்துவர் இன்று சமூகத்தால் மதிக்கப்படுபவராக பார்க்கப்படுகிறார். இப் படிப்புகளை டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என பல நிலைகளில் படிப்புகளைப் படிக்கலாம்.ஆனால் மிகக் குறைவான கல்வி நிறுவனங்களில் மட்டுமே இப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட நேச்சுரோபதி பட்டப்படிப்பானது 4 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. நியூட்ரிஷன் தெரபி, அக்குபஞ்சர், ஓமியோபதி மருந்துகள், இயற்கையான குழந்தை பிறப்பு, தாவர மற்றும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை இதில் படிக்க வேண்டும். ரெய்கி, ஓமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளை இணைத்து நேச்சுரோபதி சமயங்களில் செயல்படுகிறது.இம் மருத்துவத்தின் அடிப்படைகளான உடற்பயிற்சி, புகை பிடித்தலை நிறுத்துவது, காய்கனிகளை உட்கொள்ளுவது, திட்டமிட்ட எளிய உணவுப் பழக்கம் ஆகியவை இன்று பல நாடுகளிலும் வரவேற்புடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் தனியார் மற்றும் அரசு சுகாதார மையங்களில் நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பணி வாய்ப்புகள் உருவாகியுள்ளன. நம் நாட்டின் அதிக மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தனியாக நேச்சுரோபதி மருத்துவர் பயிற்சி செய்வதற்கும் நல்ல சூழல் தற்போது நிலவுகிறது. நவீன விஞ்ஞான மருத்துவத்தின் பக்க விளைவுகள் பற்றி இன்று எண்ணற்ற மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் நேச்சுரோபதிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றே கூறலாம். நேச்சுரோபதி பணித் துறைகள்: இத் துறையின் பணிப் பிரிவுகள் என இவற்றைக் கூறலாம். உணவு முறையைப் பொறுத்த சிகிச்சைஆலோசனை மற்றும் வாழ்க்கை முறை சீரமைப்புமன அழுத்தத்தைத் குறைக்க உடற்பயிற்சி, ரிலாக்சேஷன் டெக்னிக் மற்றும் உணவின் மூலமாக அட்ரினலின் சுரப்பியை கட்டுப்படுத்துதல்இயற்கை முறைகளின் மூலமாக உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்குவதுமூலிகை வைத்திய முறைநீர் மூலமாக நோயை குணப்படுத்தும்ஹைட்ரோதெரபிஉடலில் வலி உள்ள பகுதிகளுக்குத் தரப்படும் மசாஜ்  அக்குபஞ்சர்உடற்பயிற்சிநேச்சுரோபதி படிப்பகள்: இப் படிப்பில் சேர குறிப்பிட்ட வரையறைகள் இல்லையென்றாலும் பொதுவாக +2வை இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பானது பி.என்.ஒய்.எஸ். என அழைக்கப்படுகிறது. 4 1/2 ஆண்டுகள் படித்தபின் ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப்பும் உண்டு. இப் படிப்பை இந்தியாவில் 10 கல்லூரிகள் தந்து வருகின்றன. 10ம் வகுப்பு படித்தவர்கள் புனேயிலுள்ள டிரீட்மெண்ட் அட்டென்டன்ட் டிரெய்னிங் கோர்ஸ் படிப்பில் சேரலாம். இது புனேயிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நேச்சுரோபதி கல்வி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. யோகாவும் நேச்சுரோபதியும்: இந்து மத தத்துவத்தின் சுய அறிவு மற்றும் விடுதலைக்கான 6 அம்சங்களில் ஒன்றாக யோகா திகழ்கிறது. உபநிடதங்கள்,பகவத்கீதை, பதஞ்சலி முனிவரின் யோகசூத்ரம், ஹடயோக பிரதிபிகா ஆகியவற்றில் யோகாவின் அடிப்படைகள் காணப்படுகின்றன. உடலியல் ரீதியாகவும் ஆன்மிகத் தெளிவுக்கும் யோகாவே அடிப்படையாகக் கருதப்படுகிறது. நேச்சுரோபதியில் யோகாவின் பங்கு அளப்பறியது. மனித உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உயிர்ப்புள்ளதாக மாற்றும் அரிய பொக்கிஷமாக யோகா இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகிறது. நேச்சுரோபதி மருத்துவ முறையானது மனித வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலமாக இயற்கையோடு இயைந்த வாழ்வை உறுதி செய்வதால் எதிர்காலத்தில் இத் துறை மிகச் சிறப்பான எழுச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !