அமெரிக்காவில் அசத்தும் இந்திய மாணவர்கள்
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன் உட்பட வெளிநாடுகள் எதுவாக இருந்தாலும் அங்குள்ள தலைசிறந்த பல்கலை மற்றும் கல்லூரிகளில் பயின்று தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதை விரும்புன்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில்தான் அதிக அளவில் இந்திய மாணவர்கள் தங்கியிருந்து உயர்கல்வியை கற்றுவருகின்றனர். இந்திய மாணவர்களை கவர வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அரசு பல்வேறு சலுகைகளையும், முன்னுரிமைகளையும் வழங்கி வருகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்களுக்கு எதிராக சமீபத்தில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் சர்வதேச மாணவர் சமுதாயத்தினரின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்பதற்காக வரும் வெளிநாட்டு மாணவர்களின் மூலம் அன்னிய செலாவணியை கணிசமாக பெற்று வந்த ஆஸ்திரேலிய அரசிற்கு அங்குள்ள மாணவர்களின் செயல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, சர்வதேச மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை நீக்க முடியாமல் தவித்து வருகிறது. ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டுள்ள மாணவர்கள், இந்திய மாணவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் படிப்பறிவில் அங்குள்ள மாணவர்களை நம்மவர்கள் பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதே முழு முதற்காரணமாக கருதப்படுகிறது. படிப்பதை தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த விரும்பாத இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 94 ஆயிரத்து 563 மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் படிப்பதற்கான அங்கீகாரத்தை பெற்றிருந்தனர். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அபரிமிதமானது என்பதால் இந்த வாய்ப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. கல்வியை மையமாக வைத்து வெளியிடப்படும் அனைத்து அமெரிக்க பத்திரிகைகளிலும் இந்திய மாணவர்களின் நலன்கள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், பாதுகாப்பு தொடர்பான கட்டுரைகள் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக இணைய தளத்தில் தனி வெப்சைட் துவங்கப் பட்டுள்ளது. அமெரிக்க இந்திய மாணவர்களுக்கான கல்வி அறக்கட்டளை நவீனப்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தப் பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் பல்கலைகளின் எண்ணிக்கை, அவர்களின் கட்டண விகிதம், தங்குமிடத்திற்கான செலவு விபரம் உட்பட அனைத்தும் பட்டியலிடப்பட்டு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு எளிதான வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பல்கலைகளில் படிப்பதற்கான அங்கீகாரம் பெற்ற இந்திய மாணவர்கள் விசாவினை பெறுவதற்கான நேர்காணல்முறை எளிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகளை எப்படி அணுகவேண்டும், ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும், எத்தனை நாட்களுக்குள் விசாவினை பெற முடியும் என்ற விபரங்களும் வெப்சைட்டுகளில் விரிவாகவும், தெளிவாகவும் விவரிக்கப் பட்டுள்ளன. இது தவிர அமெரிக்காவில் இளங்கலை இறுதி கல்வியாண்டில் படித்து வரும் இந்திய மாணவர்களின் அனுபவங்கள், அவர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை தொகுத்து கட்டுரைகளாக வெளியிடும் பணியினை அமெரிக்க பத்திரிகைகள் செய்து வருகின்றன. சமீபத்தில் வெளி-வந்துள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவின் புர்து பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வரும் இறுதியாண்டு இந்திய மாணவர் அர்ஜூன் பாசின் தெரிவித்துள்ள அனுபவ தகவல்கள் வருமாறு: முறைப்படி விசா பெற்று அமெரிக்காவின் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது புதிய உலகில், புதிதாக பிறந்ததைப்போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் கண்கள் கண்ட காட்சிகள் அனைத்தும் புதுமையாக இருந்தன. இந்தியாவிலிருந்து விமானத்தில் வரும்போது என்மனதிற்குள் ஏற்பட்டிருந்த பதட்டம், பரபரப்பு அனைத்தும் நான் சென்று சேர வேண்டிய பல்கலை வளாகத்திற்குள் நுழைந்தவுடன் காணாமல் போயிருந்தது. என்னைப்போன்று ஏராளமான மாணவர்கள் அங்கிருந்தனர். அந்தந்த நாடுகளின் குணநலன்களோடு காட்சியளித்த அவர்களைப்பார்த்தபோது தனிமைபயம் என்னை விட்டு அகன்றதோடு குதூகலமும், ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. முதல்நாள் வகுப்பு முடிந்து பல்கலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்தபோது எங்கள் பேராசிரியர் எங்களை கடந்து சென்று கொண்டி-ருந்தார். என் அருகில் நின்றிருந்த மாணவர், சார் என்ற மரியாதையுடன் பேராசிரியரை அழைத்தார். திரும்பி பார்த்த அவர், எங்களை அருகில் அழைத்து எனது பெயரின் முதல் பாதி, அல்லது இரண்டாவது பாதியை சுருக்கி வைத்து மாணவர்கள் அழைப்பதைத்தான் நான் விரும்புவேன். சார், என்று கூப்பிட்டு என்னை அன்னியப்படுத்தாதீர்கள். நான் உங்களில் ஒருவன் என்று எங்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு கனிவான குரலில் கூறினார். தனது துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த அந்த பேராசிரியர் தனது பெயரை குறிப்பிட்டு அழைக்குமாறு எங்களிடம் கூறியது வியப்பை அளித்ததோடு ஆசிரியர், மாணவர்களிடையே உள்ள உறவுமுறை எத்தகையது என்பதை தெளிவுபடுத்தியது. இந்திய மாணவர்களிடம் இருக்கும் ஒரு பெரியக்குறை என்னவென்றால் மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களோடு நட்பு கொள்ளாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அதேப்போன்று ஓய்வு நேரங்களில் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படிப்பது அல்லது பல்கலை வளாகத்திற்குள் ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து பாட புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதை தலையாய கடமையாக கருதுகின்றனர். அமெரிக்க மாணவர்கள் அந்தந்த நேரத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதில்தான் தங்கள் ஈடுபாட்டினை காட்டுகின்றனர். உடல் தகுதிக்கு அமெரிக்கர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். விளையாட்டு அல்லது உடற்பயிற்சியின் மூலம் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அமெரிக்க மாணவர்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாமாக வலியச்சென்று அவர்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஒதுங்கி இருப்பவர்களை எந்த நாட்டு மாணவர்களும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் அனைத்து மாணவர்களோடும் நாம் நெருங்கி பழகினால் அற்புதமான அனுபவங்கள் நமக்கு கிடைப்பதோடு, விசாலமான அறிவையும் நாம் பெற முடியும். அவர்களின் மூலம் மிக எளிதான வேலை வாய்ப்புகளை பெற்று நம் பொருளாதார நிலையை ஓரளவிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். எனவே ஆசிரியரோடு நேரடி தொடர்பு என்பது வகுப்புகளை பொறுத்த வரை நமக்கு கிடைப்பது சிரமம். நமது தனி திறமைகளின் மூலமாகத்தான் ஆசிரியர்களின் அறிமுகத்தை பெறமுடியும். ஆய்வு கட்டுரைகளில் இருந்து படிப்பு சம்பந்தமாக நாம் தயாரிக்கும் கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் அதில் பிறர் உதவியில்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அது பெரிய குற்றமாக கருதப்படுவதோடு, பல்கலையை விட்டு வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். இவ்வாறு மாணவர் அர்ஜூன் பாசின் தெரிவித்துள்ளார். அமெரிக்க கனவுடன் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வாழ்த்துவோம்.