கல்வி மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்த மத்திய அரசு ஆர்வம்
மாணவர்களின் உண்மையான திறனைப் பரிசோதிக்கும் தேர்வு முறையைவடிவமைப்பது நமது கல்வியாளர்களுக்கு நீண்ட காலமாக ஒரு சவாலாகவே இருந்து வந்துள்ளது. எனவே இதில் என்ன மாதிரியான முறையை நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து தற்போதைய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தனது அமைச்சகத்தை முடுக்கி விட்டுள்ளார். பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருவதன் மூலமாக மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்று கபில் சிபல் கருதுகிறார். உலகளவில் அறியப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதபுத்தகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. எனினும் புத்தகங்களிலிருந்து சரியான பதில்களை தேர்ந்தெடுத்து கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களைஎழுதுவதில் மாணவர்களுக்கு சிரமமிருப்பதால் இந்த முறை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சமீபத்தில் நோபல் பரிசு வென்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவரது படிப்புக் காலத்தில் ஐ.ஐ.டி., மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை என்பது நமது தேர்வு முறைகள் எதைப் பரிசோதிக்கின்றன என்ற சர்ச்சைக்காக மேற்காட்டப்படும் தகவல் ஆகும். குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் கல்வியை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பங்காக தேசிய உயர் கல்வி நிதியுதவிக் கழகம் என்னும் புதிய அமைப்பு ஒன்றை மத்திய அரசு துவங்கவுள்ளது. மத்திய அரசின் கல்வி தொடர்பான முயற்சிகளில் தனியார் துறையையும் இணைத்திடும் முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. படிப்பை முடித்துவிட்டு பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் விகிதம் தற்போது 12.4 ஆக உள்ளது. இதை 2020ம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக அதிகரிப்பது, தரம் வாய்ந்த ஆசிரியர்களை அனைத்து நிலைகளிலும் பணி அமர்த்துவது போன்ற முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவை பலனளிக்கத் துவங்கும் போது இந்திய கல்வி முன்னேறத் துவங்கும் என்பதில் சந்தேகமில்லை.