நிழலைத் தேடும் பூமி...!
விரிவடைந்து வரும் நகரப் பகுதிகளின் இடையே மேகத்தை முட்டும் உயரத்தில் எழுந்துள்ள அடுக்குமாடி கட்டடங்கள், சாலைகள் எங்கும் விதவிதமான வாகனங்கள், வீடுகள் தோறும் நவீன இயந்திரங்கள், நகரங்களைத் தொடர்ந்து கிராமப்புறங்களையும் ஆக்கிரமித்து வரும் தொழிற்சாலைகள் ஆகியவை நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கும் இன்றைய அடையாளங்கள். வேலையில்லா திண்டாட்டம் நீங்கவும், வளர்ந்த நாடாக உலகரங்கில் பறைசாற்றவும் ஒவ்வொரு நாடும் தொழில், விவசாய, தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், அத்தகைய வளர்ச்சியைவிட சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த நிலையா தற்போதுள்ளது? அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிபரம்: கடந்த 1500ம் ஆண்டுகளில் 35 சதவீதமாக இருந்த இந்திய வனப்பகுதி 1700-1940களில் 26 சதவீதமாகவும், தற்போது 15 சதவிதமாகவும் குறைந்துள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் வனப் பகுதியை அழிப்பதையே ஊக்குவித்துவருகிறோம். இதனால், கடந்த 60 ஆண்டுகளில் மட்டும் 11 சதவீத வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், காடு காணாமல் போய்விடும். கடந்த 1980ம் ஆண்டிலிருந்து புவியின் வெப்பம் கடுமையாக அதிகரித்தபடி உள்ளது. 0.4 முதல் 0.45 டிகிரி செல்சியஸ் உயர்ந்து தற்போது 0.74 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. தற்போதைய 21வது நூற்றாண்டிற்குள் ஒட்டுமொத்த புவி வெப்பம் 6.4 டிகிரி செல்சியசாகக்கூட உயரும் என்று ஐ.பி.சி.சி. (காலநிலை மாற்றம் குறித்த உலகநாடுகள் குழு) கணித்துள்ளது. புவியின் வெப்ப அளவு 1.5 - 2.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரித்தாலே 20 முதல் 30 சதவீத தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்கிறது ஒரு ஆய்வு. புவியின் வெப்பம் உயரும்பட்சத்தில் பெரும் இயற்கை பேரழிவுகள் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் கார்பனை அதிகளவில் வெளிப்படுத்தும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல் ஆகியவற்றை பெருமளவில் பயன்படுத்துவதே... புவி வெப்பமயமாதலால் குடிநீர், காலநிலை, காடு, சுற்றுச்சூழல், விவசாயம், கடல்வாழ் உயிரினங்கள், மனித மற்றும் விலங்குகளுக்கான வாழ்வாதாரம் மற்றும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியம் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. புவி வெப்பமாதலும், அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்களும் ஓரிரு நாளில் திடீரென நிகழ்வதில்லை. அன்றும், இன்றும்: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ளதைப் போன்ற கோடிக்கணக்கான வாகனங்கள் இல்லை; ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வசதிகள் இல்லை. இதுபோன்ற வசதிகளை நமக்கு உருவாக்கிக் கொடுக்கும் தொழிற்சாலைகள் இல்லை. இதனால், அன்றைய காலம் போல் மாசில்லா காற்றும் தற்போது இல்லை. நமது சுய, ஆடம்பர வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான இயந்திரங்கள், கார்பனை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. இயற்கை வளங்களை நம்பியே வாழும் நாம்... அத்தகைய இயற்கை வளங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நாம், அதனை அழித்துக் கொண்டே வருகிறோம். மக்களின் வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, வசதியான வாழ்வு போன்றவற்றிற்கு தொழில் வளர்ச்சி அவசியம் தான். அதற்காக, மரங்களை வெட்டி, காடுகளை அழித்து, ஏரிகளையும், ஆறுகளையும் வீட்டுமனைகளாக்கி அடுக்குமாடி குடியிருப்பாகவும், தொழில் நிறுவனங்களாகவும் மாற்றுவது நமது அழிவுக்கு நாமே தேதி குறிப்பது போல... அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், தொழிற்சாலை அதிகரிப்பாலும் அவற்றில் இருந்து பெருமளவு கார்பன் வெளிப்படுகிறது. அதனால் காற்று மாசுபடுகிறது. இந்த நேரத்தில், நாம் சுவாசிக்க காற்றுமண்டலத்தில் கார்பன் அளவை குறைத்து, ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் மரங்கள் நமக்கு தேவை. ஆனால், அத்தகைய மரங்களை அழித்து கார்பனை அதிகளவில் வெளியிடும் தொழிற்சாலைகளை அல்லவா ஊக்குவித்து வருகிறோம்? புவி வெப்பத்தில் பசுங்குடில் வாயுக்கள்: வாகனங்கள், ஏ.சி., மின்சார விளக்குகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவும், நாம் ஒவ்வொருவரும் கார்பன் அளவை அதிகரித்து, இன்று உலகத்தை அழித்துவிடுமோ என்று அச்சம் கொள்ளும் காலநிலை மாற்றத்திற்கு காரணமாய் உள்ளோம். அதிக விவசாயம் கூட, பசுங்குடில் வாயுக்களில் (கிரீன் ஹவுஸ் கேஸ்) ஒன்றான மீத்தேன் அளவை அதிகரிப்பதற்கு காரணமாய் அமைகிறது. கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா (4.6 சதவீதம்) 4ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா (21.2 சதவீதம்), சீனா (15.2 சதவீதம்), ரஷ்யா (5.4 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியா பசுங்குடில் வாயுக்களை வெளிப்படுத்துவதில் 1990-2004 ஆண்டுகளில் மட்டும் 55 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பசுங்குடில் வாயுக்களை பெருமளவில் வெளிப்படுத்தும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் மீது சுமையை வைக்க நினைத்தது. அதனால், கோபன்ஹேகன் மாநாடு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அழிவை நோக்கி...: பசுங்குடில் வாயுக்கள் நமக்கு ஒன்றும் எதிரியல்ல. அவை சரியான அளவில் இருப்பது நன்மை தரக்கூடியது. பூமியை சரியான வெப்பநிலையில் வைக்க இந்த பசுங்குடில் வாயுக்கள் மிகவும் அவசியம். இவை இல்லாவிடில் மனிதர்களால் வாழமுடியாத கடும் குளிரான காலநிலைதான் நிலவும். அதேநேரம், இவை அதிகரித்தால் பல ஆபத்துக்கள் ஏற்படும். பூமியில் இருந்து வெப்பம் வெளியேற முடியாமல் பசுங்குடில்களால் தடுக்கப்படுகிறது. இதனால் வெப்பம் அதிகரித்து பூமி சூடாகிறது. விளைவு, பனிக் கட்டிகள் உருகுகின்றன. அந்த நீர் கடலில் கலப்பதால், கடல் மட்டம் அதிகரித்து கடலோரப் பகுதிகள், தீவுகள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஒரு தரப்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கடந்த நூறு ஆண்டுகளாக வெகுவாக கடல்மட்டம் உயர்ந்துவருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதேநிலை நீடித்தால் சிறு தீவுகள் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். லட்சத்தீவும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் சார்ந்ததல்ல. உலக காலநிலையையே மாற்றிப்போடக்கூடியது. தமிழகத்தில் வெளியாகும் பசுங்குடில் வாயுக்கள் அளவைப் பொறுத்துத்தான் தமிழகத்தை தாக்கும் என்பதல்ல. மனிதர்களே இல்லாத, அண்டார்டிகா கண்டத்தில் பனிப்பாறைகள் உருகிவருகின்றன. இதனால் பென்குயின்களும், பனிக் கரடிகளும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்ற விஞ்ஞானிகளின் கூற்று இதற்கு தக்க சான்று. மழைப்பொழிவும், மாறுபட்ட வெப்பநிலையும் லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்துவருகிறது என்றாலும், தற்போதை ஆய்வின் தகவல்கள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. உதாரணமாக, சென்னை நகரின் வெயிலின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பைவிட, கடந்த 5 ஆண்டுகளில் அதிக நாட்களில் 40 டிகிரி நிலவி வருகிறது. இதேபோலத்தான் மழை அளவும். குறிப்பிட்ட காலங்களில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே பெய்துவிடுகிறது. இதனால், மழையின் அளவும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வெகுவாக அதிகரிக்கிறது. இதன்விளைவு, நீர் பிடிப்பு பகுதிகளான ஏரி, குளம், ஆறு ஆகியவை குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு வரும் சென்னை, மும்பை போன்ற நகரங்களில் மழைநீர் செல்ல இடமில்லை. இரண்டு மணிநேர இடைவிடாத மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை. மழைநீர் ஒருபுறம் வீணாகிறது; மற்றொரு புறம் கடலில் கலந்து கடல் மட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. யாரை நம்பி இயற்கை?: மனிதனை நம்பி இயற்கையில்லை. இயற்கை வளங்களை நம்பித்தான் ஒவ்வொரு உயிரினமும் உள்ளது. இயற்கைக்கு எந்த உதவியும் நாம் செய்யவேண்டியதில்லை. அதற்கு தீங்கு விளைவிக்காமல் இருத்தலே அதற்கு நாம் செய்யும் மிகச் சிறந்த கைமாறு. கொளுத்தும் வெயிலை தாங்கமுடியாத நாம் நிழலைத் தேடி ஓடுகிறோம்; நாம் இருக்கும் அறையை மட்டும் செயற்கையாக குளிரூட்டிக் கொள்கிறோம். சரி... நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூட்டை தனித்துக்கொள்ள இந்த பூமி எங்கே செல்லும்? சிந்தித்து பாருங்கள். பூமி குளிர்ச்சியாக குறைந்தால் மட்டுமே, அதன்மீதுள்ள நம்மைப் போன்ற அனைத்து உயிரினங்களும் நலமாக இருக்க முடியும். இயற்கையை பயன்படுத்திக்கொள்ள நாம் எந்தளவுக்கு உரிமை எடுத்துக்கொண்டோமோ, அதைவிட அதிக கடமை இயற்கையை பாதுகாப்பதிலும் உண்டு என்பதை பாரபட்சமின்றி அனைவரும் உணர்ந்து, பசுங்குடில் வாயு வெளியீட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். அதுதான் தற்போதைய அவசரத் தேவை. வருங்கால வாரிசுகள் வசதியான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக நாம் சொத்து சேர்ப்பதில் தவறில்லை. அந்த சொத்துக்களின் பட்டியலில் முதலிடம் தர வேண்டியது இயற்கைக்கு... இயற்கையை சேதப்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்தலே உண்மையான, நிலையான, வருங்கால தலைமுறையினருக்கு தேவைப்படும் ஈடு இணையில்லாச் சொத்து! -வி. சதீஷ் குமார்