குழு விவாதம்
குழு விவாதம் என்பது இன்று பல்வேறு முறைகளிலும் கையாளப்படுகிறது. இது குறித்த பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் உள்ளது. குழு விவாதத்தை எப்படிக் கையாளுவது என்பது குறித்த சில உத்திகளை இங்கு பார்க்கலாம். பொதுவாக குழு விவாதம் என்பது 8 முதல் 12 பேர் பங்கேற்பதாகவும் 15 முதல் 20 நிமிடம் வரை நீடிப்பதாகவும் அமைகிறது. அதாவது சராசரியாக ஒவ்வொருவருக்கும் 2 நிமிடம் வரை பேசுவதற்கு நேரம் இருக்கும். ஒரு குழு விவாதத்தில் தனித் தன்மை பெற 2 நிமிடத்திற்குக் கூடுதலாகவும் 3 நிமிடங்களுக்குள் முடிவதாகவும் பேச வேண்டும். தலைப்புக்குத் தொடர்பாக 4 முதல் 5 விபரங்களையாவது நாம் தெரிவிப்பது அறிவுறுத்தப்படுகிறது. விவாத நிலைகள் ஒரு குழு விவாதத்தில் துவக்கம், பொருள் சார்ந்த பேச்சு, தொகுப்புரை என்ற 3 நிலைகள் இருக்கும். துவக்கம் ஒரு குழு விவாதத்தை முதலில் துவங்கினால் மட்டுமே மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெறமுடியும் என பலரும் தவறாக நினைக்கின்றனர். இது பொதுவாக அம்சம் தான் என்றாலும் இது மட்டுமே உண்மையல்ல. ஒரு குழு விவாதத்தைத் துவக்குவது என்பது 3 விதங்களில் நன்மை தரக்கூடியது. ஒருவரின் தலைமைப் பண்பை அடையாளம் காட்டுவது, பிறரின் கனவத்தை ஈர்க்கும் தன்மை மற்றும் தலைப்புக்குத் தொடர்புடைய முக்கிய அம்சத்தை முதலிலேயே தெரிவிப்பது என்ற 3 அம்சங்களே அவை. ஆனால் இதில் சில பிரச்னைகளும் உள்ளன. தலைப்புக்குத் தொடர்பில்லாவதற்றைக் கூறி ஆரம்பிப்பது, வார்த்தைகளால் விவாதத்தை நிரப்புவது போன்றவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஒரு விவாதத்தின் வடிவத்தை ஏற்படுத்துவதாக விவாதத்தைத் துவங்குபவர் இருக்க வேண்டியிருப்பதால் அவருக்குப் பொறுப்புகள் அதிகமுள்ளது. இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் கருத்துச் சிதறல்களும் ஆழமற்ற விவாதங்களும் ஏற்பட்டுவிடும். எனவே தலைப்பில் நல்ல அறிமுகம் இருந்தால் மட்டுமே விவாதத்தைத் துவங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். மேற்கோள் காட்டுதல், வரையறுத்தல், கேள்விகளை எழுப்புதல் போன்ற உத்திகளின் மூலமாக ஒரு விவாதத்தைத் துவங்கி முதற் பதிவில் நமது முத்திரையைப் பதிக்க வேண்டும். 12 முதல் 15 நிமிடம் வரை பேசப் படும் இந்த நிலையில் தான் கருத்துச் செறிவுடன் கூடிய விளக்கங்கள் தேவைப்படுகின்றன. பலரும் இந்த நிலையில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த நிலையில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. விவாதத்தில் குரலில் மாற்றங்களை உணர்ந்து சூழ்நிலைக்கேற்ப விவாதத்துக்குள் நுழைய வேண்டும்.இந்த நிலையில் தலைப்புக்குத் தொடர்புடைய அம்சங்களில் சில உண்மைகளயும் புள்ளிவிபரங்களையும் நம்மால் தர முடியும் பட்சத்தில் அனைவரும் நம்மையே கவனிக்க வைக்க முடிவதோடு அது நல்ல பலனையும் தரும். இது ஒரு குழு விவாதத்தின் 3வது நிலையாகும். முடிவுரை மற்றும் தொகுப்புரை என்ற இரண்டுக்குமான வித்தியாசத்தை உணருவது இந்த நிலைக்கு முக்கியமானதாகும். முடிவுரை என்பது ஒரு குழுவின் தலைப்பு குறித்த ஒட்டு மொத்த அங்கீகாரம் அல்லது எதிர்க்கருத்தைக் குறிக்கிறது. தொகுப்புரை என்பதில் விவாதத்தில் அலசப்பட்ட கருத்துக்களை தொகுத்துக் கூறுவதே அறிவுறுத்தப்படுகிறது. குழு விவாதத்தின் நோக்கமே கவனிக்கும் மற்றும் தகவல் பரிமாற்றத் திறனை அறிவது தான் என்பதால் முடிவைக் கூறாமல் தொகுத்துக் கூறுவதே சிறந்ததாகும். தொகுப்புரையை எப்போது செய்வது என்பதிலும் அதிக அக்கறை தேவை. விவாதத்தை நடத்துபவர் தொகுப்புரையைக் கேட்கும் பட்சத்தில் விவாதம் முடிவுக்கு வந்துவிட்டதை அறிய வேண்டும். தொகுப்புரையின் போது புதிய கருத்துக்களைக் கூறுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தொகுப்புரையை சுருக்கமாகவும் கருத்துக்களை விடாமலும் கூறுவது நல்லது.