ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., பற்றி தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறைவு
அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கல்வி நிறுவனங்கள், நாட்டில் மொத்தம் 5 இடங்களில் உள்ளன. புனே, போபால், கொல்கத்தா, மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களே அவை. IISER எனப்படும் இந்த கல்வி நிறுவனம், BS-MS, Integrated Ph.D, Ph.D., உள்ளிட்ட படிப்புகளை வழங்குகின்றன. இதன்மூலம், அறிவியல் ஆர்வமுள்ள இளம் இந்திய இளைஞர்கள், தங்கள் விருப்பமான துறையில் சிறப்பாக சாதிப்பதற்கான வாய்ப்புகளை பெற முடியும். IISER வழங்கும் 5 ஆண்டு BS-MS படிப்பு, இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் 12ம் வகுப்பு படிக்கும்போதே இந்தப் படிப்பு பற்றி விழிப்புடன் இருந்து, அறிவியல் துறையில் சாதிக்க வேண்டுமென்ற தங்களின் கனவை நனவாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று நான் அவர்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். ஒரு சாதாரண கல்லூரியில் B.Sc., மற்றும் M.Sc., படிப்புகளில் சேர்வதற்கும், IISER போன்ற கல்வி நிறுவனத்தில் BS-MS படிப்பில் சேர்வதற்கும் வித்தியாசம் அதிகம். இப்படிப்பில் சேரும் மாணவர்கள், தங்களின் முதல் 2 ஆண்டுகளில், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் நல்ல அறிவைப் பெறுகிறார்கள். இதன்மூலம், எந்த பாடத்தில் தங்களுக்கு நல்ல திறன் இருக்கிறது என்பதை கண்டுகொள்ள மாணவர்களுக்கு நேரம் கிடைக்கிறது. இதன்பிறகு, அடுத்த 3 ஆண்டுகளில், தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வுசெய்து, அதை விரிவாக படிப்பார்கள். மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் 5 ஆண்டுகால படிப்பிற்கு, மாதாமாதம் ரூ.5,000 உதவித்தொகையாக வழங்கப்படும். (KVPY தேர்வெழுதி தேர்ச்சிபெற்றால், 4 மற்றும் 5ம் ஆண்டுகளில் மாதாமாதம் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்). அனைத்து IISER -களுக்கும் விண்ணப்பிக்க ஒரு பொது விண்ணப்ப படிவத்தை பயன்படுத்துமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் மற்றும் தங்களின் விருப்பமான IISER எது என்பதை அவர்கள் அதில் தெரிவிக்க வேண்டும். பல்வேறான விண்ணப்ப படிவங்களை அவர்கள் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கவுன்சிலிங், அவர்கள் விரும்பிய IISER -லேயே நடைபெறும். அதேசமயம், ஒரே கல்வி நிறுவனத்திற்கு அதிக போட்டி நிலவினால், ரேங்கிங் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தைக் கோரிய மாணவருக்கு, அது கிடைக்கவில்லை என்றால், இரண்டாவது விருப்பமாக குறிப்பிட்ட IISER -ல் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும். IISER கல்வி நிறுவனத்தில், BS-MSபடிப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் KVPY எனப்படும் தேசிய உதவித்தொகை திட்டம் முக்கியமான ஒன்றாகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோர், IISER -க்கு விண்ணப்பிக்கலாம். கூட்டு நுழைவுத்தேர்வு(Advanced), மற்றொரு வழியாகும். இந்த தேர்வு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படும். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான வலைதளத்தில் உங்களின் விண்ணப்பத்தை தேடவும் மற்றும் உங்களின் மதிப்பெண்ணுடன், அதே ஆண்டு ஜுன் முதல் ஜுலை மாதத்திற்குள் IISER -க்கு விண்ணப்பிக்கலாம். ரேங்கிங் அடிப்படையில் நீங்கள் கவுன்சிலிங்கிற்கு தேர்வு செய்யப்படுவீர்கள். நேர்முகத் தேர்வு கிடையாது. தங்களின் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் முதல் நிலைகளிலான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், 2014ம் ஆண்டு ஜுன் மாதம் IISER நடத்தும் திறனறி தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் சட்டப்படி, மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படும். இக்கல்வி நிறுவனத்திற்கான மாணவர் சேர்க்கை செயல்பாட்டை சுருக்கமான முறையில் பார்த்தோமானால், கீழ்கண்ட 3 நிலைகளில் அது நடைபெறும். அவை, * KVPY தேர்வில் பெற்ற ரேங்கிங்* JEE (Advanced) தேர்வில் பெற்ற ரேங்கிங்* IISER நடத்தும் திறனறி தேர்வில் பெறும் மதிப்பெண்கள். IISER கல்வி நிறுவனத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 5% மட்டுமே என்பது வேதனையான விஷயம். ஆனால், ஆந்திரா, கேரளா மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களிலிருந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 30% முதல் 40% வரையாகும். தமிழ்நாட்டின் இந்த குறைந்த பங்களிப்பிற்கு நமது கல்வித்தரம் மோசம் என்பது காரணமல்ல. மாறாக, நம்மிடைய விழிப்புணர்வு குறைவு என்பதே காரணம். ஒவ்வொரு (0க்கும் 150 மாணவர்கள் வீதம் இருக்கையில், BS-MS படிப்பிற்கு மட்டும், ஒவ்வோர் ஆண்டும் 750 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். IISER கல்வி நிறுவனத்தில் சேர்வது பற்றிய விரிவான விபரங்களைப் பெற http://www.iiser-admissions.in என்ற வலைத்தளம் செல்க. - தர்மராஜா, ஏ.டி, பிஎச்.டி., மாணவர், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., புனே