உள்ளூர் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளை கையாள்வதற்கான சிறப்பு படிப்புகள்

மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள், மனித இனத்தில் தனிச்சிறப்பு பெற்றவர்கள். அவர்களுடைய நலப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பான ஆற்றலும், மனோநிலையும் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான நலப் பணி என்பது எளிதானதல்ல. அதீத பெறுமையும், சமயோசித அறிவும், இரக்கம் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பலவித பண்புகள் மிகவும் முக்கியம். பள்ளி மேல்நிலைப் படிப்பில் எந்தப் பாடத்தை தேர்வு செய்து படித்திருந்தாலும் கவலையில்லை. மாற்றுத்திறனாளிகளின் நலப்பணிகள் தொடர்பான பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இந்தியா முழுவதும் Rehabilitation Council of India(RCI) என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பல கல்லூரிகளில் இதுதொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. பார்வைக் குறைபாடு உள்ளவர், கேட்டல் குறைபாடு உள்ளவர் மற்றும் மனநல பாதிப்புகள் உள்ளவர் என்ற பல நிலைகளில், எதில் ஒருவருக்கு ஆர்வம் உள்ளதோ, அதற்கான படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். Locomotor and Cerebral Palsy, Autism, Vocational councelling and Care giving போன்ற பலவிதமான துறைகளில் சிறப்பு பட்டப்படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகள், குறைபாடுள்ள குழந்தைகளை பலவிதங்களிலும் கவனிக்கும்பொருட்டு, தனது மாணவர்களை தயார்படுத்துகின்றன. இப்பணிகள் தொடர்பான சிறப்பு கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசு சாரா நிறுவனங்களுடன்(NGOs) இணைந்து, தமது ஆற்றல் மற்றும் வளங்களை இச்சேவை துறையில் ஈடுபடுத்துகின்றன. புதிய கல்வி தத்துவம் என்னவெனில், திறன் அடிப்படையிலான வேறுபாடுகளின்றி, அனைத்துக் குழந்தைகளும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதே. எனவே, இந்த இலக்கையடைய, சிறப்பு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள், சிறப்பு உதவியாளர்கள்(facilitators) மற்றும் வழிகாட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். சம்பளம் இத்துறையில் படித்து சிறப்பு ஆசிரியர்களாக இருப்பவர்கள், 6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, பிற ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தையே Grade அடிப்படையில் பெறுகிறார். அதேசமயம் ஆலோசகர்கள் அதிகம் பெறுகிறார்கள். பொதுவில் சொல்வதென்றால், ஒருவர் இத்துறையில் தனது பணியை ரூ.9000 முதல் ரூ.15000 வரையிலான தொகையில் தனது தகுதிக்கேற்ப பெற முடியும். இத்துறையில் பணிபுரியும் ஒருவர், சுய கட்டுப்பாடு, அறிவு மற்றும் மனித மனத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ள ஒருவர் பக்குவப்பட்டவராக இருக்க வேண்டும். எனவே, இத்துறையில் படித்து பணிபுரிய விரும்பும் மாணவர்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொண்டு அவர்களை கையாள்வது என்பது பற்றி சிறப்பு ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இத்துறையில் பணிபுரிய வயதை ஒரு பொருட்டாக பார்க்கத் தேவையில்லை. சிறந்த மனப்பக்குவம்தான் முக்கியம். எனவே, இத்துறையில் உயர்கல்வி கற்கும்போது, கூடுதல் அறிவும் முக்கியம். இப்பணியைப் பொறுத்தவரை, பதவிஉயர்வு மற்றும் சம்பளம் போன்றவையும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், பணி திருப்தி என்பது மிகவும் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்