உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் முடிவு எதிர்காலத்தை நோக்க வேண்டும்....

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவன், தன் பெற்றோரிடம், நான் ஒரு Visual Merchandiser ஆகப் போகிறேன் என்று கூறினால், பெற்றோர் நிச்சயம் குழப்பமடைந்து, கலவரமடைவர். மகன் ஏதோ ஒரு புரியாத மொழியில் பேசுகிறான் மற்றும் ஏதோ ஒரு உபயோகமல்லாத படிப்பை மேற்கொள்ளப் போகிறான் என்றே பெற்றோர் நினைப்பர். மேலும், தன் மகன், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பவில்லையா? என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவர். ஆனால் இன்றோ, நிலைமை பெருமளவில் மாறிவிட்டது. Visual Merchandising துறையானது, பிரபலமான ஒன்றாகவும், பல மாணவர்களால் விரும்பப்படும் துறையாகவும், மாணவர்கள் தங்களது படைப்பாற்றல் மற்றும் திறமையை நிரூபிக்கும் களத்தை வழங்கும் படிப்பாகவும் நினைக்கப்படுகிறது. இன்றைய உலகம் மிகவும் நவீனமாக மாறிவிட்டது. மொபைல் போன்கள், இ-மெயில் கணக்குகள் மற்றும் கூகுள் தேடல் போன்றவை இல்லாமல், வாழ்க்கை இல்லை என்ற நிலை உள்ளது. தொழில்நுட்பமும், அதன் தாக்கமும், நமது வாழ்க்கை முறையை மட்டுமல்ல, எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய நமது மனோநிலையையும் மாற்றிவிட்டன. முன்பெல்லாம், அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகள், வணிகம் படிக்கும் மாணவர்களுக்கு, சிஏ மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகள், கலை படிக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியப் படிப்புகள் மற்றும் நிர்வாகப் படிப்புகள், என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படிப்புகளே, பெரும்பான்மை மாணவர்களின் லட்சியமாகவும், புனித நோக்கமாகவும் இருக்கும் மற்றும் ஆசிரியர் - பெற்றோர் கூட்டணியும் அப்படிப்புகளையே வலியுறுத்துவார்கள். ஏனெனில், அவர்களும் அவ்வாறே வளர்ந்து வந்தவர்கள்தான். ஆனால், இன்றைய நவீன வளர்ச்சியில், அந்த பாரம்பரிய படிப்புகளை பின்னுக்குத் தள்ளும் வகையில் பல புதிய படிப்புகள் வந்துவிட்டன. தொழில் வாய்ப்பு மற்றும் ஊதியத்தில், இவை லாபகரமானவையாகவும், ஆர்வமூட்டுபவையாகவும் இருக்கின்றன. ஆனால், இவைப் பற்றிய போதுமான தெளிவு, மாணவர்களுக்கு இருக்கிறதா என்றால், இல்லை என்றே சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பான்மை மாணவர்களின் கற்பனைகள், வழக்கமான, பாரம்பரிய படிப்புகளை விட்டு மீறி செல்வதில்லை. இதற்கு முக்கிய காரணமாக, மாணவர்கள் வளரும் மற்றும் வாழும் சூழலை சொல்லலாம். இந்த பிற்போக்குத்தனத்தால், பல சிறந்த வாய்ப்புகளை மாணவர்கள் நழுவ விடுகிறார்கள். நம்மில் பலரும் என்ன நினைக்கிறோம் என்றால், தற்போது, நல்ல வாய்ப்புகளைத் தரும் தொழில்துறையானது, பிற்காலத்திலும் அதே நிலையில் இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு. எதிர்காலம் என்பது கடந்த மற்றும் நிகழ்காலத்தைவிட, மிகவும் வேறுபட்டது. தொழில்துறையில், பல ஆச்சர்யப்படத்தக்க மாறுதல்கள், எதிர்காலத்தில் ஏற்பட்டிருக்கும். எனவே, இன்றைய நிலையை வைத்து, எதிர்காலத்தை கற்பனை செய்ய வேண்டாம். ஒரு தனிநபர் பணிபுரிவதற்கான கால வரம்பு சுமார் 30-40 வருடங்கள் என்று வைத்துக் கொண்டால், அந்த காலகட்டங்களில் ஒருவர் பலமுறை பணி மாறுகிறார். ஒரு சமயத்தில் லாபகரமாகவும், சிறப்பாகவும் இருந்த ஒரு தொழில்துறை, அடுத்த சில காலங்களில் தொய்வை சந்திக்கலாம். அதேசமயம், தொய்வாக தெரியும் ஒரு தொழில்துறை, அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பானதாக மாறலாம். பல சமயங்களில், ஒரு தொழில்துறையை தேர்ந்தெடுப்பதானது, மாணவரின் உண்மையான திறன் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் நிகழ்வதில்லை. மாறாக, அன்றைய சமூக கற்பிதம், ஊடகங்கள் செய்யும் பிரச்சாரம், மற்ற மாணவர்கள் எடுக்கும் முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கம், ஒரு மாணவரின் ஆர்வம், திறன் மற்றும் அன்றைய கல்வி நிலைகள் ஆகியவைப் பற்றி அறியாத பிறரின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளின் அடிப்படையிலேயே, பல மாணவர்களின் முடிவுகள் அமைகின்றன. இவ்வாறு எடுக்கும் முடிவுகள், ஏறக்குறைய, நம் முழு வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். உலகத்தின் மாறும் இயல்புகளையும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் ஊகித்து விளக்கும் வகையில், எந்த தகவல் ஆதாரமும் நம்மிடையே இல்லை என்பதுதான் அது. நாம் எதிர்காலத்தை நுணுகிப் பார்த்தோமானால், நமது கல்வியும், தொழில் விருப்பங்களும் வித்தியாசமானதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்