இளைஞர்களே தொழில்முனைவோராக விருப்பமா? படிக்கும்பொழுதே தயாராகுங்கள்
எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை எதிர்கொள்ளாத நபர்கள் எவரும் இருக்க முடியாது. இளம் வயதில் இருக்கும் லட்சியங்கள் மருத்துவர், பொறியாளர், அரசுப் பணி என பணிபுரிவதினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகிறது. தொழில் முனைவோராக விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதை விட விவசாயி, அரசியல்வாதி போன்ற லட்சியம் உடையவர்கள் முற்றிலுமாக இருக்க மாட்டார்கள். பள்ளிக்காலத்தை முடிக்கும் நேரத்தில் லட்சியங்கள் ஒரு தெளிவினை அடைந்திருக்கும். அப்பொழுது தொழில் முனைவோராக ஆர்வம் இருந்தால் தயங்காதீர்கள். அதற்கான முன் முயற்சிகளை செய்வதற்கு தயாராகுங்கள். சுய தொழில்தான் தங்களது எதிர்காலம் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கேற்ப இளநிலை படிப்பை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும். முதுநிலை படிப்பில் மேலாண்மை படிப்பை தேர்ந்தெடுக்கும்பொழுது பிற்காலத்தில் தொடங்கப்போகும் நிறுவனத்தை நிர்வகிப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலாண்மை படிப்பிலும், சுய தொழிலுக்கு ஏற்ற வகையில் எந்த வணிகப் பள்ளி கல்வியை வழங்குகிறது என்பதை அறிந்து அந்த கல்வி நிறுவனத்தில் படிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். நிறுவனம் என்று வரும்பொழுது... எப்படி ஒரு செயலை கற்று அதனை எந்த வகையில் செயல்படுத்துவது? எதிர்பாராமல் வரும் சிக்கல்களை எப்படி அறிந்து கொள்வது? எந்த மாதிரியான வரி முறையை பின்பற்றுவது? வருமான வரி அல்லது சேவை வரி செலுத்த வேண்டியது இருக்குமா? தொழிலில் சட்ட ரீதியான நுட்பங்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட வேண்டியது இருக்குமா? தொழில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உதவித்தொகைகள் அல்லது சிறப்பு திட்டங்கள் வைத்திருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. நீங்கள் அனுபவசாலியாக இல்லாமல் ஒரு தொழிலை செய்யப்போகிறீர்கள் என்றால் அதற்கு சிறப்பான பாடங்களை படித்திருக்க வேண்டியது அவசியமாகிறது. தொழில் அதிபர்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள், அடைந்த வெற்றி போன்ற தகவல்களைப் பெற்று அதன் அடிப்படையில் பாடத்திட்டத்தை தற்போது பல கல்வி நிறுவனங்கள் அமைத்துக்கொண்டுள்ளன. இதன் மூலம் நடைமுறையில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை கல்வி நிறுவனங்களிடமிருந்து அறிந்துகொள்ளலாம். இது போன்ற பாடங்கள் மூலம் நீங்கள் வழிகாட்டுதல், வணிகத்தை திட்டமிடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்தல், குறுகிய கால செயல் திட்டங்கள், நீண்ட கால செயல்திட்டங்கள் போன்றவற்றை தயாரிக்கவும், மேலும் நீங்கள் வேலை பெறுபவராக இருப்பதா அல்லது வேலை வழங்குநராக இருப்பதா என்பதை முடிவு செய்வதற்கும் கல்வி உதவும். தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்தவைகளில் சில... என்.எஸ்.ஆர்.சி.இ.எல். வழங்கப்படும் படிப்புகள்: எம்.பி.இ.எஃப்.பி. / எம்.பி.டபிள்யூ. இ. இ.டி.ஐ. வழங்கப்படும் படிப்புகள்: பி.ஜி.டி.எம். - பி.இ. / பி.ஜி.டி.எம். - டி.எஸ். எக்ஸ்.எல்.ஆர்.ஐ. வழங்கப்படும் படிப்புகள்: பி.ஜி.பி.சி.இ.எம். எஸ்.பி.ஜெ.ஐ.எம்.ஆர். வழங்கப்படும் படிப்புகள்: பி.ஜி.பி.எஃப்.எம்.பி. / ஒ.எம்.பி. / டபிள்யூ.எம்.பி. / பி.இ.பி.