உள்ளூர் செய்திகள்

முன்னேறு! முன்னேறு!

‘தொடர் முன்னேற்றம், தொடர்ச்சியான முன்னேற்றம்’ என்ற சொற்களை ஜப்பான் தேசத்தில் எல்லா மக்களின் இதயங்களை ஆளும் வார்த்தைகள் என்ற செய்தியை சமீபத்தில் வாசித்தேன். இவ்விரண்டும் ஒன்றுபோல தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல! தொடர் முன்னேற்றத்தை ஆங்கிலத்தில் 'Continious Improvement’ படிப்படியான முன்னேற்றத்தை 'Continual Improvement’ என்றும் பொருள் கொள்ளவதுதான் சரி! வழக்கமான பாதையில் பயணப்படுவது பாதுகாப்பாகவும், சவுரியமாகவும் இருக்கலாம். ஆனால், அதில் வளர்ச்சி இருக்காது. வழக்கமான பணிகளையும் படைப்பாற்றல் திறன் மூலமாக, எளிமையாகவும், சிக்கனாமகவும் செய்து காட்டி முன்னேற்றத்தின் கதவுகளைத் திறக்க வேண்டும். முதன்மையாக இருப்பதல்ல வெற்றி, தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் வெற்றி. தேக்கம் இல்லாமல், தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்! செய்யும்  ஒவ்வொரு செயலிலும் படிப்படியான முன்னேற்றம் இருக்க வேண்டும். அதாவது, எந்த வேலையாக இருந்தாலும் அதை மறுமுறை செய்யும்போது அதில் மேம்பாடும் தரமும் கூட வேண்டும், கூடவே புதுமையும் நிகழவேண்டும். ‘ஐம்பது வருடங்களாக, ஒரு வேலை ஒரே முறையில் தான் செய்து வருகிறேன்’ என்று வாதிடுவதுடன், அந்த வேலையை மாற்றி செய்வதற்கான யோசனைகளையும், நிராகரித்து விடுபவர்களால் வெற்றிப் பயணத்தைத் தொடங்க முடியாது. ‘எதை செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும்’ என்ற வேட்கையுடன் செயலாற்றத் தொடங்குங்கள். புதுப்புது முயற்சிகளை எடுக்க முடியுமா? என்று சந்தேகத்துடன் முடங்கிவிடாமல், ஏன் முடியாது? என்று துணிந்து எழுபவனே துயரங்களைத் துரத்தியடித்து சாதனைச் சரித்திரத்தின் உச்சியைத் தொடுகிறான். ஆகவே, புதிதாக முயற்சி செய்யுங்கள்! வென்றால் பரிசு; தோற்றால் அனுபவம். அந்த அனுபவத்தை கொண்டு அடுத்தமுறை வெல்ல முடியும்! முயலுங்கள்! வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட, தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு உயர்ந்தது! -முனைவர் கவிதாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !