அயல்நாட்டில் எம்.எஸ்., படிக்கலாம்!
முதுநிலை பட்டப்படிப்பான, எம்.எஸ்., படிப்பை வெளிநாட்டில் தொடர விரும்பும் மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை என்பதை அறிந்து விண்ணப்பிப்பது அவசியம்! அமெரிக்காஉயர் கல்விக்கு திட்டமிடும் மாணவர்களின் முதல் தேர்வு அமெரிக்கா! துறை சார்ந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன், உலக தரமிக்க கல்வியை வழங்குவதில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முன்னிலை வகிக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் பல்வேறு ‘ஸ்காலர்ஷிப்’ மற்றும் ‘பெல்லோஷி’ களை வழங்குகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள்: கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில், எம்.எஸ்., படிப்பை முடிக்கும், மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெறுவது உறுதி. இங்கிலாந்துகுறுகிய காலத்தில் மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வகையில் கால அட்டவணைகளை உருவாக்கி, தரமான கல்வியை இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. இந்நாட்டு அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பல்வேறு கல்வி உதவித்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம், வசிப்பிட செலவுகள் உள்ளிட்டவற்றை கணிசமாக குறைத்து கொள்ளாம். சிறந்த கல்வி நிறுவனங்கள்: சேல்போர்ட் பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், பர்மிங்காம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழகம். இவற்றில், ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள், அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாபடிப்பதற்கு ஏதுவான சூழல், குறைந்த கல்வி கட்டணம் மற்றும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கல்வி நிறுவனங்கள் என பல்வேறு காரணிகளால் மாணவர்கள், ஆஸ்திரேலியாவை தேர்வு செய்கின்றனர். சிறந்த கல்வி நிறுவனங்கள்: அடிலெய்டு பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம் மற்றும் கான்பரா பல்கலைக்கழகம். இவற்றில், இறுதியாண்டு பட்டப்படிப்பு படிக்கும் போதே, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பை மாணவர்கள் பெறுகின்றனர். ஜெர்மனிதொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஏற்ற நாடு. உயர் தொழில்நுட்ப வசதி, தூய்மையான சுற்றுச்சூழல், தரமான கல்வி திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்குகிறது ஜெர்மனி. இங்கு, இலவச கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜெர்மனி மொழியை கற்றிருப்பது அவசியம். பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், அந்நாட்டிலேயே பணிபுரியும் வாய்ப்பினையும், அந்நாட்டு அரசாங்கம் வழங்கிவருகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள்: பேரியுத் பல்கலைக்கழகம், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பிரன்சுவிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ட்ரெஸ்டிந் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். கனடாஉலக தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களில், கனடிய பல்கலைக்கழகங்களும் குறிப்பிடத்தக்கவை. அங்கு, உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், பெரும் தொகையை, கல்வி, போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்திற்காக செலவிட நேரும் என்பதால் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வது அவசியம். பட்டப்படிப்பை முடித்தவுடன் கனடாவில் வேலை பெறுவது கடினம், இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. சிறந்த கல்விநிறுவனங்கள்: ரொரன்ரோ பல்கலைக்கழகம், ஒட்டாவா பல்கலைக்கழகம், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், விண்ட்சர் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய பல்கலைக்கழகம். பிரான்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் பிரான்சும் ஒன்று. தரமான ஆய்வக கட்டமைப்பு வசதி, குறைந்த செலவில் உயர் கல்வியை படிக்கும் வாய்ப்பு, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை என அனைத்திலும் சிறப்பாய் செயல்படுகின்றன பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள். சிறந்த கல்விநிறுவனங்கள்: ஈகோலி நார்மல் சுப்பீரியர் பாரிஸ்-தென் பல்கலைக்கழகம், பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம், பாரிஸ் டெக்கார்ட் பல்கலைக்கழகம், எக்ஸ் மார்ஸைல் பல்கலைக்கழகம்.