பேசினால் வேலை கிடைக்கும்!
எனது தந்தை, ‘கல்வி வள்ளல்’ கலசலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமசுந்தரபுரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர். கல்வியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், கல்வி கற்பதற்கான சூழல் அப்போது, அவரது கிராமத்தில் இல்லை. அவரது ஆதங்கத்தின் வெளிப்பாடாக, கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு கல்வி நிறுவனத்தை துவங்க வேண்டும் என்ற கனவு அவரை துரத்தியது! அவர் பிறந்த மண்ணிலேயே கல்வி நிறுவனத்தை, துவங்கி பிற குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கினார். முதலில் பொறியியல் கல்லூரி, பின்னர் தொழில்நுட்பம், கல்வியியல், பார்மசி என பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களை தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கினார். அதுவே, தற்போது கலசலிங்கம் பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது. தற்போது, மருத்துவம் தவிர, அனைத்து படிப்புகளையும் வழங்குகிறோம். ‘சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையிலான கல்வி அளிக்க வேண்டும்’ என்பது எங்கள் கல்வி நிறுவனத்தின் குறிக்கோள்! அதன்படி, இன்ஜினியரிங் மாணவர்கள், செயல்முறையில் கல்வி கற்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளோம். பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மையம் துவங்கியுள்ளோம். வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகளுக்கும் பொறியியல் கல்வி தரவேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கு மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை வழங்குகிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தில் படித்த, அத்தகைய மாணவர்கள் தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதை பார்க்கும்போது, ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை! இவ்வாறு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான், தனியார் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், சர்வதேச முன்னணி கல்வி நிறுவனங்களின் பட்டியலில், நமது நாட்டின் கல்வி நிறுவனங்களும் நிச்சயம் முக்கிய இடங்களைப் பெறும். அதற்கு ஏதுவாக, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு மத்திய மாநில அரசுகள் மேலும் ஊக்கமக்களிக்க வேண்டும். பேச்சுத்திறன் அன்று, அனைவரும் நிறைய பேசுவார்கள். இன்று, விஞ்ஞானம் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள், மொபைலில் ‘மெசேஜ்’ அனுப்பித்தான் பழகுகியுள்ளனரே தவிர, பேசப் பழகவில்லை. வேலைக்கு பஞ்சமில்லை; மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்துடனான வேலை தரவும் தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. வேலை பெற, மாணவர்கள் திறம்பட பேச வேண்டும். ஆனால், 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து, கல்வியில் சிறந்த மாணவராக இருந்தாலும் கூட, அவருக்கு தெளிவாக பேசும் திறன் இல்லை! ‘பாசிட்டிவ்’, ‘நெகட்டிவ்’ இரண்டையும் கொண்ட ‘பேட்டரி’யைப் போல, நம் வாழ்க்கையிலும், நன்மை, தீமை இரண்டும் உண்டு! ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக பார்க்க வேண்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது, சுபிட்சமான வாழ்க்கை அனைவருக்கும் அமையும்! -முனைவர் ஸ்ரீதரன், வேந்தர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்.