உள்ளூர் செய்திகள்

வேண்டா நினைவெனும் குப்பைகள்

பாரதி சொல்லுவாரே ‘மனம் வெளுக்க வழியே இல்லை’ என்று, அதற்கு அர்த்தம் என்ன என்று யாரேனும் யோசித்தது உண்டா? பல சமயம் நமக்குள் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளை எல்லாம், அவ்வப்போது கூட்டிப் பெருக்கி, சுத்தம் செய்து அவற்றை விலக்கித் தூர எறிந்து விடத்தெரிந்து கொண்டால், வாழ்க்கை என்றைக்குமே அழகானதாக இருக்கும்; சந்தேகம் வேண்டாம்! அதே சமயம், நமது சோகங்கள், துக்கங்கள் மற்றும் துயரங்கள் எனும் எதிர்மறை உணர்வுகளை பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டால், அதுவே மிகவும் ஆபத்தாக, பின்னாளில் வந்து நம்மை பயமுறுத்தும். அத்தகைய எதிர்மறை உணர்வுகளை கண்ணீராக வெளிப்பட அனுமதிப்பது தவறு அல்ல; அழுவது என்பது ஆணுக்கு அழகல்ல என்பது தவறு தான். ஆணோ, பெண்ணோ வலி வேதனை என்பது பொதுவான ஒன்று தான். மனதை லேசாக வைத்துக் கொள்ள அவ்வப்போது அந்த உணர்வுகளை கொட்டித் தீர்த்து விட வேண்டும். வெற்றி பெற்ற நம்பிக்கை தருணங்கள், பாராட்டு பெற்ற ஆனந்தத் தருணங்கள் இவற்றை மனதில் சேமித்து வைத்து தேவையான பொழுது அவற்றை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கும் பொழுது தன்னம்பிக்கை கூடுகிறது! அதுவே, எதிர்மறையான சில சம்பவங்களை நினைவில் வைத்து புதைத்து, மீண்டும் மீண்டும் கண்ணுக்கு முன்னால் காட்சியாக கொண்டு வந்து பார்ப்பது மிகவும் தவறு. அதைத் தான் ‘வேண்டா நினைவெனும் குப்பைகள்’ என்கிறேன்! கவலைப்படுவதில் நாமெல்லாம் வல்லவர்கள். கவலைப் படுவது மனித இயல்பு, என்றாலும் எதற்கெடுத்தாலும் கவலைப் படுவது, கவலை தரும் விஷயம் தான். கடந்த கால ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்கள் குறித்த கவலைகள், என்ன செய்திருக்கலாம்; என்ன செய்யாது இருந்திருக்கலாம் எனும் கவலைகள், என்ன நடந்திருக்கலாம் எனும் கவலைகள் எல்லாமே வருத்தம் தருபவை, வேதனை தருபவை தான். இக்கவலைகளால் பாதி இரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு தூக்கம் கெடுத்துக் கொள்பவர்கள் இன்று ஏராளம். சந்தோஷமாக யாரும் கவலைப்படுவதில்லை. ஏதாவது ஒரு தீர்வு வருமா என்று தான் கவலைப்படுகின்றனர். ஆனால், அந்ததொடர் கவலைகள் நமது கற்பனைத் திறனையும், படைப்பாற்றலையும் முடக்கிப் போடுகிறது என்று நாம் அறிவதில்லை! கவலை கொள்வதால் நாளைய துக்கங்கள் குறைவதில்லை. மாறாக அவை நாளைய மகிழ்ச்சியை தான் குலைக்கின்றன! தீர்க்க முடியாத கவலைகள் பற்றிய தொடர்ந்த எண்ண ஓட்டம் இருப்பின், வேறு எதிலும் மனம் கவனம் செலுத்த முடியாது போகிறது என்பதனை உணர்ந்து, வெற்றியை மகிழ்வை நோக்கிய பாதையில் நமது எண்ணங்களை வழி நடத்த வேண்டும். அதற்கு மனதை பக்குவப்படுத்திட வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் வரும் பொழுது மனதை வேறு திசை நோக்கிச் சிந்திக்கும் படி கட்டளை இட வேண்டும். இந்த சிந்தனை மாற்றம் என்பது மனதை வேறு ஒரு மையப்புள்ளிண்யில் சிந்திக்கும் படி நாம் ஆணையிடுகிறோம். உதாரணத்திற்கு, ஓர் அவமானம் ஏற்பட்டு விட்டது. மனம் வாட்டத்தோடு நடந்த அந்த சம்பவத்தையே அசை போடுகிறது என்றால், சட்டென்று வீட்டில் ஒரு ‘பல்ப்’ ஏன் எரியவில்லை என்று கவனிக்கலாம். அப்போது, அந்த சிக்கல் ‘பல்ப் பியூஸ்’ ஆகி விட்டதா? அல்லது ‘வோல்ட்டேஜ்’ குறைந்து இருக்கிறதா? என்று சிந்திக்க ஆரம்பிக்கும். சிறிது நேரம் டிவி பார்க்கலாம். ஒரு தேநீர் பருகலாம். இப்படி வேறு சில செயல்கள் செய்யும் பொழுது, முள்ளில் சிக்கிய துணி போல இருந்த அந்த எதிர்மறை எண்ணம், மனதில் இருந்து மெதுவாக விடுபடும். நினைவுகள் என்பது நல்லது தான். ஆனால் சில நேரம் வேண்டாத சில நீங்கா நினைவுகள் நம்மை முடக்கி விடுகின்றன. நம்மை மேலும் முன்னேற்றிடும் முடுக்கி விடும் சீரான நல்ல எண்ணங்கள் தோன்றிட, மனதை ஒரு மந்திரவாதி போலப் பழக்கப்படுத்த வேண்டும். நான் சொல்லும் இந்த செயலை நீங்கள் முயற்சி செய்தால் தான் அதன் பலன் என்ன என்று புரியும். தெரிந்து கொண்டால் அது அறிவு. அறிவை செயலாக்கினால் தான் அரிய வெற்றிகள் கிடைக்கும்! அறிந்திருத்தல் அறிவு அல்ல, மாறாக பயன்படுத்தலே... திட்டமிடுவது செயல் அல்ல, மாறாக செயல்படுத்தலே... வெற்றியாளர்கள் விளைவுகளை முடிவுகளை திட்டமிடுவதில்லை. மாறாக, நல்ல தொடக்கத்தையே திட்டமிடுகின்றனர். நல்ல தொடக்கம் பாதி வெற்றி... நீங்கள் எப்படி? வேறு யாரையும் விட சிறந்த நபராக இருக்க வேண்டும் என்பதை விட, நேற்று நாம் இருந்ததை விட இன்று சிறப்பாக இருக்க வேண்டும், என்பதே நோக்கமாக இருக்கட்டும். வெற்றி நிச்சயம்! - முனைவர் பாலசாண்டில்யன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !