உள்ளூர் செய்திகள்

‘வேலை தரும் படிப்புகளுக்கே முக்கியத்துவம்’!

நான் பச்சைப்பன் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த உடன், வேலைக்கு செல்வதா? அல்லது தொழில் துவங்குவதா? என்ற யோசித்துக்கொண்டிருந்த தருணத்தில், ‘கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும்’ என்று தந்தை கூறிவந்தது, எனது நினைவுக்கு வந்தது... அதன்படி, அப்போது பிரபலமாக இருந்த பார்மசி படிப்பிற்கான கல்லூரியை சென்னையில் ஒரு வாடகை வீட்டில் ஆரம்பித்தேன். 1992-93ம் ஆண்டில் 23 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அக்கல்லூரி, 2008ல் வேல்ஸ் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. தற்போது, 25ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தருவாயில், எங்கள் கல்வி நிறுவனத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது பெருமையாக உள்ளது! ‘ஒரு மாணவர் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்லவேண்டும்; அப்போதுதான், அவரது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்’, என்பதை நன்கு உணர்ந்தவன் நான். ஏனெனில், கல்லூரி படிப்பை முடித்த தருவாயில் எனது குடும்ப சூழலும் அப்படித்தான் இருந்தது. எனவேதான், எனது அனைத்து கல்வி நிறுவனங்களும், வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புகளையே வழங்குகின்றன. ‘பிரீ.கேஜி முதல் பிஎச்.டி.,’ வரையிலான அனைத்து படிப்பும் ஒரே குடையின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்பது எனது குறிக்கோள். அதேசமயம், பயோடெக்னாலஜி, நர்சிங், கேட்டரிங், இன்ஜினியரிங், மரைன், பிசியோதெரபி, நாடிக்கல் சயின்ஸ் என அனைத்தும் வேலை வாய்ப்பை வழங்கும் படிப்புகளே! இந்தியாவின் சிறந்த 10 கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகின் சிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், வேல்ஸ் பல்கலைக்கழகம் வளர வேண்டும் என்பதே எனது கனவு. அதை நோக்கியே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் புதிய கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க உள்ளேன். பள்ளிப் பாடத்திட்டத்தில், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத்திட்டங்களிலும் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்பதும் எனது ஆசை! கல்வி நிறுவனத்தை நான் வியாபாரமாக பார்க்கவில்லை; சேவையாகத்தான் பார்க்கிறேன். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடிகிறது; பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி முடிகிறது என்றுதான் நான் பார்க்கிறேன். வெற்றி எனக்கு எளிதாக அமையவில்லை; பல சவால்களையும் மீறி சாதித்தவை தான் இவை. அரசு அமைப்புகள், அலுவலங்கள் அனைத்திலும் உரிய அங்கீகாரம் பெற எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதை உணர்ந்தவன். அன்றைய காலத்தில் கல்வி நிறுவனத்தை ஆரம்பிக்க சூழல் ஏதுவாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் ஒரு புதியவர், கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது என்பது மிகுந்த சவாலான விஷயம்! தற்போதைய சூழலில், ஒரு அரசு கல்வி நிறுவனத்தில் தேவையான அங்கீகாராம் எளிதில் கிடைத்துவிடுகிறது. ஆனால், கட்டடங்கள், ஆய்வகங்கள் என எந்த ஒரு விசயத்திற்கும் நிதி பெறுவது கடினம். தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, புதிய கட்டடங்கள், உபகரணங்கள் வாங்குவது எளிது. ஆனால், உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தான் காலதாமதமாகிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான அங்கீகாரங்களை அரசு முன்வந்து விரைவில் அளிக்க வேண்டும்! -ஐசரி கணேஷ், வேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !