நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கல்வி அவசியம்!
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம்! மேலை நாடுகள் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருப்பதாக நாம் உணர்கிறோம். அதற்கு காரணம் அங்கு பெண்களுக்கும், பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதுமே! இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு காரணம், பெண்களை அடக்கிவைப்பதால் தான். 20 வயது ஆண்களும், 20 வயது பெண்களும் இணைந்து சமமாக பாடும்படும்போது இந்தியா வல்லரசாகும் என்பதைத்தான், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 2020ம் ஆண்டை குறிப்பிட்டார். இன்று நம் நாட்டிலும், பெண்கள் சிறப்பான இடத்தை பிடித்துவருகின்றனர். கம்ப்யூட்டர், இ.சி.இ., எலக்டிரிக்கல் போன்ற இன்ஜினியரிங் படிப்பை அதிகமான மாணவிகள் இன்று தேர்வு செய்து படிக்கின்றனர். சிவில் படிப்பில் கூட அதிகளவிலான மாணவிகள் சேர்வதை பார்க்க முடிகிறது. அதேசமயம், மெக்கானிக்கல் படிப்பை வெகு சில மாணவிகளே தேர்வு செய்கின்றனர். நாடு மட்டுமல்ல, வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால், பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும். குடும்பத்தை திறம்பட செயலாற்ற பெண்கள், கல்வி கற்பது மிக அவசியம். ஆனால், இன்றும் சில பெற்றோர்கள் பெண்களுக்கு உயர்கல்வி வழங்க மறுக்கிறார்கள். பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிட முயல்கிறார்கள். கணவன்களை விட மனைவிகளுக்கு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு அதிகமாக இருக்கிறது; அதனால், மேற்கல்வி படிக்க விரும்பினாலும், திருமணத்திற்கு பிறகும் அவர்களால் உயர்கல்வி பெறமுடியாமல் போகிறது. இந்நிலையில் கல்வியில், பெண்களுக்கு சமபங்கு உரிமை அளிப்பது மிக அவசியம்! கடந்த சில ஆண்டுகளாக, பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பை ஒதுக்கி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நோக்கி செல்கின்றனர். துவக்கத்தில், பொறியியல் படிப்பு படித்தவர்களும், கலை, அறிவியல் படித்தவர்களும் ஒரே மாதிரியான ஊதியம் பெறுவது போல் தோன்றினாலும், சில ஆண்டுகள் அனுபவத்திற்கு பிறகு, பொறியியல் படித்தவர்கள் தான் அதிக ஊதியம் பெறுவர். இன்றைய மாணவர்களுக்கு இடையூறுகளும், கவனச் சிதறல்களுக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகள், சமூக வலைதளங்கள் ஆகியவை மாணவர்களின் நேரத்தை பெரிதளவு பறித்துவிடுகின்றன. இவற்றிற்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்தி, நேரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளும் மாணவர்கள், வாழ்க்கையில் நிச்சயம் சாதிப்பார்கள்! பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளை முறையாக கவனிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். அப்போது ஒழுக்கம் வளரும். ஒழுக்கம் இல்லாத கல்வி யாருக்கும் பயனற்றது. இவற்றை உணர்ந்தே எங்கள் கல்லூரியில் ஒழுக்கத்திற்கும், பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்! -எஸ்.சேகு ஜமாலுதீன், செயலர், ஆலிம் முகம்மது சலேக் கல்வி நிறுவனங்கள், சென்னை