சுயபரிசோதனை ஆசிரியர்களுக்கும் அவசியம்!
தனது திறனை, பரிசோதித்திக்கொள்வதற்காக 41 வயது ஆசிரியர் ஒருவர்,‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’ எனும் ‘கேட்’ தேர்வை 14வது முறையாக எழுதி, முழு மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்! ஐ.ஐ.எம்.,கள் உட்பட நாட்டின் மிகச் சிறந்த பி-ஸ்கூல்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ‘கேட்’ தேர்வில் இதுவரை அவர், 99 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்ததே இல்லை, என்பதும் குறிப்பிடத்தக்கது! மும்பையைச் சேர்ந்த பட்ரிக் டிசோஷா எனும் அந்த ஆசிரியர் கூறுகையில், “கேட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும்நான் முதலில் தேர்வு முறை குறித்து அறிந்து கொள்ளவும், எனது திறனை சுய பரிசோதனை செய்துகொள்ளவும் இத்தேர்வை தொடர்ந்து எழுதிவருகிறேன்” என்கிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், அவரவர் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், அவ்வப்போது சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம், என்பதையும் தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியுள்ளார், ஆசிரியர் பட்ரிக் டிசோஷா!