கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்
அறிவியல் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் ஒரு நாட்டை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பே ‘கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்’!முக்கியத்துவம்:இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ், 1942ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆய்வுக் கழகமான ‘சி.எஸ்.ஐ.ஆர்’, தற்போது 3987 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 6454 தொழில்நுட்ப உதவியாளர்களுடன் நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள், 39 வெளிப்புற ஆய்வு மையங்கள் மற்றும் 3 புதுமைத்துவ மையங்களுடன் இயங்கி வருகிறது. விண்வெளி, கட்டுமானம், வேதியியல், எரிவாயு உற்பத்தி, கடல்சார் ஆராய்ச்சிகள் என பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிக்கான ஆய்வுகளை, சி.எஸ்.ஐ.ஆர்., ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.பிரதான ஆய்வுகள்: ஆப்பிரிக்கர்களின் வழியில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் தான் அந்தமான் பழங்குடியினர் என்பதை நிரூபிக்க முதன்முதலில் அவர்களின் மரபியல் வேறுபாடுகளைப் பகுப்பாய்வு செய்தது. மனிதர்களுக்குப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய உதவும் டிரான்ஸ்ஜெனிக் டிரோசோபிலா என்கிற புற்றுநோய் பரிசோதனை மாதிரியை உருவாக்கியது. ஆஸ்துமா நோய்க்கு ஸ்டெராய்ட் அல்லாத ஆஸ்மான் என்கிற மூலிகை மத்திரியையும் கண்டுபிடித்தது. காயங்களைக் குணப்படுத்த மஞ்சள் பல ஆண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்படுவதை நிரூபித்து அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட மஞ்சளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய வைத்தது.கல்வி நிறுவனங்கள்:டிரக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கிளாஸ் செராமிக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஜியோகிராபிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷினோகிராபி, இன்ஸ்டிடியூட் ஆப் டாக்ஸிக்காலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் மைனிங் அண்ட் பியூயல் ரிசர்ச், பொடானிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா டெல்லி என இந்தியா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் சி.எஸ்.ஐ.ஆர்., கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றில், மாணவர்கள் விரும்பும் துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம்.சி.எஸ்.ஐ.ஆர்., நெட்:சி.எஸ்.ஐ.ஆர்., அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றவோ அல்லது உதவித்தொகையுடன் பிஎச்.டி., பயிலவோ மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தகுதித் தேர்வினை எழுத வேண்டும்.ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும் இந்த தேர்வில் முதுநிலை அறிவியல் (எம்.எஸ்சி.,) பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும். கெமிக்கல் சயின்சஸ், எர்த் சயின்சஸ், லைப் சயின்சஸ், மேத்மெடிக்கல் சயின்சஸ் மற்றும் பிசிக்கல் சயின்சஸ் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஎச்.டி., பயில விரும்பினால் ‘ஜுனியர் ரிசர்ச் பெலோஷிப்பின்’ கீழ் மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தவிர, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘சினியர் ரிசர்ச் பெலோஷிப்’ திட்டத்தின்படி மாதம் ரூ.28,000 வழங்கப்படுகிறது.விபரங்களுக்கு: www.csir.res.in