உள்ளூர் செய்திகள்

சினிமா நுட்பம் கற்க எப்.டி.ஐ.ஐ., சிறந்த கல்வி நிறுவனங்கள்-78

‘தி பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ (எப்.டி.ஐ.ஐ.,) 1960ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் பிரபாத் ஸ்டுடியோ வளாகத்தில் தொடங்கப்பட்டது. 1961ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனம். தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சினிமா தொடர்பான படிப்புகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. ‘டிவி’ தொடர்பான பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் முதலில் தனியாக டில்லியில் செயல்பட்டது. பின்னர் 1974ம் ஆண்டு அது எப்.டி.டி.ஐ.,யுடன் இணைக்கப்பட்டது. இங்கு மூன்றாண்டு டிப்ளமோ படிப்பாக- இயக்கம்- படத்தொகுப்பு- ஒளிப்பதிவு- ஒலிப்பதிவுஆகியவையும், இரண்டாண்டு படிப்பாக- நடிப்பு- கலை இயக்கம்ஆகியவையும், ஒன்றரையாண்டு படிப்பாக- கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் படிப்பும் ஓராண்டு படிப்பாக- திரைக்கதை- எலக்ட்ரானிக் சினிமாட்டோகிராபி- வீடியோ எடிட்டிங்- ஆடியோகிராபி ஆகியவையும் வழங்கப்படுகிறது. குறுகிய கால படிப்புகளாக- ‘டிவி’ புரடக்சன்- டாகுமென்டரி புரடக்ஷன்- ஆர்ட் டைரக்சன்- மேக் அப்- 2டி அண்டு 3டி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்- விர்சுவல் செட்ஸ்- டெலிவிஷன் புரடக்சன்- ‘டிவி’ ரிசர்ச் மெத்தட்ஸ்- ஸ்டடர்ஜிக் டெலிவிஷன் மேனேஜ்மென்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன. இங்கு ஆங்கில வழியிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன. எப்.டி.டி.ஐ., மாணவர்கள் எடுக்கும் படங்கள், இந்தியாவிலும், பிறநாடுகளிலும் நடக்கும் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளன. அடூர் கோபாலகிருஷ்ணன், பாலு மகேந்திரா, ஜான் அபிரகாம், சுபாஷ் கை, மகேஷ் பட், சஞ்சய் லீலா பன்சாலி, சந்தோஷ் சிவன், அஸ்ராணி, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி, நசீருதின் ஷா, ஓம் புரி, மிதுன் சக்ரவர்த்தி, அம்ரீஷ் புரி, ரெசூல் பூக்குட்டி என இந்திய சினிமாவின் முன்னணி பிரமுகர்கள் பலர், இந்த கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களே. எப்.டி.ஐ.ஐ.,யில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதில் வெற்றிபெறும் மாணவர்கள் இன்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். ‘நேஷனல் பிலிம் ஆர்கைவ் ஆப் இந்தியா’வுடன் இணைந்து நான்கு வார சினிமா விமர்சன வகுப்பையும் எப்.டி.ஐ.ஐ., நடத்தி வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள முடியும். அப்போது இந்திய அளவிலும் உலக அளவிலும் சிறந்த திரைப்படங்கள், திரையிடப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்