வெளிநாட்டு பல்கலை வருகைக்கு மத்திய அரசு ஒப்புதல்
கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் சட்ட வரைவுக்கு மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் கிளைகளை இனி இந்தியாவில் துவங்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை நடப்பில் உள்ள அம்சங்களை மாற்றும் எந்த ஒரு முயற்சியும் மிகக் கடுமையான எதிர்ப்பையே இது வரை சந்தித்து வருகிறது. இந்த விஷயத்திலும் தற்போது சர்ச்சைகள் துவங்கிவிட்டன. இந்த சட்ட வரைவைப் பற்றிய விவாதங்கள் துவங்கிய முதல் நிலையிலேயே ஆசிரியர் பற்றாக்குறை, ஊதியத்தைக் காரணமாகக் கொண்டு ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து மற்றொரு கல்வி நிறுவனத்திற்கு இடம் பெயருவது போன்ற சாத்தியக்கூறுகளைப் பற்றிய சர்ச்சைகள் எழுந்தன. தரமான கல்வி மற்றும் போதுமான வசதியின்மை ஆகிய காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்திய மாணவர்கள் உயர் கல்வி கற்க வெளிநாடுகளுக்கு செல்வதை நாம் அறிவோம். இதனால் இந்திய அரசுக்கு பெருத்த அன்னியச் செலாவணி இழப்பு கூட ஏற்படுகிறது. இந்தியாவில் தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வருகைக்கு முன் வரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பி.எஸ்.என்.எல்., எம்.டி.,என்.எல்., போன்ற நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால், இந்தத் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னரே தற்போதைய தகவல் புரட்சி ஏற்பட்டுள்ளதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இதே போல் விமானப் பணிகளிலும் தனியார் துறையின் அனுமதிக்குப் பின்னரே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே போலவே கல்வித் துறையில் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களின் நுழைவு இந்தத் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆசிரியப் பணிகளில் ஏற்படும் பற்றாக்குறையின் காரணமாக இந்தப் பணிகளுக்கு மிக நல்ல கிராக்கி ஏற்படும் என்றும் இதனால் தகுதிகள் உள்ள பலரும் இந்தப் பணிகளில் ஈடுபட ஆர்வம் செலுத்தத் துவங்குவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வருகையால் வெளி நாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு வருவது அதிகரிக்கும் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆங்கில அறிவுகொண்டவர்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை என்பதால் இந்தச் சட்ட வரைவு இந்தியாவுக்கு பெரும்பாலும் நன்மைகளையே செய்யும் என்ற கருத்துக்களும் நிலவத்தான் செய்கின்றன. இப்படியாக இந்தச் சட்ட வரைவை ஒட்டியும் வெட்டியும் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், சட்ட வரைவுக்குத் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதால், இதனால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு காலம்தான் நல்ல பதிலைச் சொல்ல வேண்டும்.