வாய்ப்புகளை அள்ளித்தரும் பெட்ரோலியம் இன்ஜினியரிங்...
பெட்ரோலியம் என்பது புவியின் அடியில் இயற்கையாக கிடைக்கும் ஒரு வகை எண்ணெய்யாகும். இவை நீர்ம நிலையில் உள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். பெட்ரோலியம் இன்ஜினியரிங் என்பது, கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு போன்ற ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக படிக்கும் இன்ஜினியரிங் படிப்பாகும். இதன் மூலமே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிப்பு நிறுவனங்களில் ஹைட்ரோகார்பன்களை ஆராய்தலும், உற்பத்தி செய்வதும் நடைபெறுகிறது. பெட்ரோலியம் இன்ஜினியரிங் துறையில் இருப்பவர்கள் புவி இயற்பியல் (ஜியோ பிசிக்ஸ்), பெட்ரோலியம் ஜியாலஜி, துளையிடுதல் (டிரில்லிங்), பொருளியியல் (எகனாமிக்ஸ்), நீர்த்தேக்கம் உருவகப்படுத்துதல், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றில் சிறந்த அறிவு பெற்றிருக்க வேண்டும். படிப்புகள்:பெட்ரோலியம் இன்ஜினியரிங் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிக்கலாம். இளநிலை படிப்பில் பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினியரிங் பிரிவில் சேருவதற்கு பிளஸ் 2 வில் ( கணிதம், இயற்பியல், வேதியியல் முடித்திருக்க வேண்டும்) அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். முதுநிலை பிரிவில் எம்.டெக்., பெட்ரோலியம் இன்ஜினியரிங் சேருவதற்கு இளநிலை படிப்பில் பெட்ரோகெமிக்கல், கெமிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் பெட்ரோலியம் இன்ஜினியரிங்கில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வகைகள்:பெட்ரோலியம் இன்ஜினியர்கள் தங்கள் பணிகளை பொறுத்து சில வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். * நீர்த்தேக்கங்களில் பணிபுரியும் இன்ஜினியர்கள்(Reservoir engineers): * துளையிடுதலில் பணிபுரியும் இன்ஜினியர்கள்(Drilling engineers) * உற்பத்தியில் ஈடுபடும் இன்ஜினியர்கள்(Production engineers) பயிலும் நிறுவனங்கள்: * அண்ணா பல்கலைக்கழகம், சென்னை(http://www.annauniv.edu/) * இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ், ஜார்க்கண்ட்(http://www.ismdhanbad.ac.in/) * பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், காந்திநகர்(http://www.pdpu.ac.in/) * மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே (http://www.mitpune.com/Home.aspx) * பெட்ரோலியம் மற்றும் எனர்ஜி படிப்புகள் பல்கலைக்கழகம், டேராடூன் (http://www.upes.ac.in/) * ராஜீவ்காந்தி இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை(http://www.rgcesri.org/) வேலைவாய்ப்பு:இத்துறை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக அளவில் உள்ளன. பெட்ரோல் தயாரிப்பு மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் தொழிலாளர், பயிற்சியாளர், இன்ஜினியர் என பல்வேறு பதவிகள் உள்ளன. மேலும் ஆய்வகத்தில் விஞ்ஞானியாகவும் பணியில் அமரலாம். துவக்கத்தில் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.8லட்சம் வரை ஊதியம் பெறலாம். பெட்ரோலியம் இன்ஜினியர்கள் மிகவும் கடுமையான சூழலில் நகரின் வெளிப்புறத்தில் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே, இன்ஜினியர்களின் ஊதியம், அவர்களுக்கு ஒத்தநிலையில் இருப்பவர்களை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும். எண்ணெய் வளமிக்க வெளிநாடுகளில் இத்துறைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.