உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் படிப்பில் யார் எந்த பிரிவை தேர்வு செய்யலாம்?

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அவர்களுக்கு ஏற்ற இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்யும் போது மிகக்கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் எதிர்காலத்தை தேர்வு செய்யும் முடிவு என்பதால், தன்னுடைய ஆர்வம் மற்றும் திறன் ஆகிய  அடிப்படையில் இம்முடிவு இருக்க வேண்டும். எந்த பாடத்தில் தனக்குத் திறன் இருக்கிறது என்பதை மதிப்பெண் பட்டியலில் இருந்து மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களையும் மாணவர்கள் அனுப்பத் தொடங்கிவிட்டனர். ஆகவே, யார் எந்த இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுக்க இது சரியான நேரம். இன்ஜினியரிங் துறை தேர்வு பற்றி இதுவரை முடிவு செய்யாத, மாணவர்கள், தற்போது மதிப்பெண் அடிப்படையில் திட்டமிட்டுக் கொள்ளலாம். இது தொடர்பாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது: பொதுவாக இன்ஜினியரிங் துறையில் கால்பதிக்க விரும்பும் மாணவருக்கு கணக்கிலும், அறிவியல் பாடங்களிலும் ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும். கணிதப் பாடத்தின் தாக்கம் மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆகவே, ‘டிபரன்சியல் கால்குலஸ்’ மற்றும் ‘இன்டக்ரல் கால்குலஸ்’ ஆகிய இரு கணித பாடங்களில் மிகச்சிறப்பான தகுதியைப் பெற்றுள்ள மாணவர்கள் மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களை தாராளமாக தேர்வு செய்யலாம். இயற்பியலில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங், உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். வேதியியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங், பெட்ரோலியம், பார்மசூட்டிக்கல், பயோடெக்னாலஜி உள்ளிட்ட துறைகளை எடுக்கலாம். இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய இரு துறைகளிலும் ஆர்வம் இருந்தால், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆர்வம் செலுத்தலாம். இயற்பியலிலும் மெக்கானிக்கல் துறையிலும் ஆர்வமும் இருந்தால், மெக்கட்ரானிக்ஸ் துறையை தேர்வு செய்யலாம். மாணவரிடம் கலைத் திறன் அதிகமாக இருக்கிறது என்றால், பாஷன் டெக்னாலஜி, ஆர்க்கிடெக்சர், சிவில் போன்ற துறைகளை தேர்வு செய்யலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அத்துறையிலும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையையும் தேர்வு செய்யலாம். இந்த இரண்டு துறைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். எலக்ட்ரானிக்ஸ் படித்தாலும், ஐ.டி., துறையில் வேலைக்குச் செல்லலாம். ஆனால் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கு வேலை கிடைத்த பின்னரும், துறை ரீதியான வளர்ச்சி நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !