உள்ளூர் செய்திகள்

ஊடகத்துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்

மேலும் தனி அந்தஸ்தைக் கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது. சமூகத்தில் நிகழும் சம்பவங்களை சேகரித்து, அதை மக்களிடம் பரப்பும் பெரும் பணியை பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள். ஆங்கிலத்தில் மீடியாத்துறை என்றும், தமிழில் ஊடகத்துறை என்றும் அழைக்கப்படும் இந்த பத்திரிகை துறை, அச்சு ஊடகம் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகம் என்ற இரு பெரும் பிரிவுகளாக உள்ளது. இந்த இரு பிரிவுகளிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. பத்திரிக்கையாளர் தொழிலுக்கு தேவைப்படும் மனோநிலை, பண்பு மற்றும் பொறுப்பு ஆகியவைப் பற்றியும் விரிவாக அலசலாம். தனிப்பட்ட பண்புகள்: ஒருவர் நல்ல பத்திரிக்கையாளராக இருக்க வேண்டுமெனில், அவருக்கு ஆர்வம், நெகிழ்வுத்தன்மை, நல்ல ஆளுமை, தெளிவான சிந்தனை, செய்தித்தாள், வார இதழ் போன்றவற்றில் நல்ல மொழியில் எழுதும் திறன் போன்றவை இருக்க வேண்டும். பத்திரிகை துறையில் இருக்கும் பல பதவிகளுக்கு ஏற்றவாறு பலவித தகுதிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் முதன்மை ஆசிரியர், உதவியாசிரியர், நிருபர், பணியாளர் போன்ற பல பொறுப்புகள் உள்ளன. பத்திரிகை செய்தியில் அரசியல், சர்வதேச செய்திகள், கல்வி, பிராந்திய செய்திகள், குற்றம், விளையாட்டு, சினிமா, வணிகம், சட்டம், தொழில் போன்ற பல பிரிவுகள் உள்ளன. நீங்கள் உதவி ஆசிரியர், நிருபர் ஆகியோரைப் போலல்லாமல், சிறப்பு கட்டுரை எழுதுபவராக இருக்கலாம். ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக இருப்பதற்கு, தேவைப்படும் மொழியில் நல்ல பேச்சு மற்றும் எழுத்து திறன் அவசியம். மேலும் சுய நெறிமுறைகளை வகுத்துக் கொண்டவராகவும், எது குறித்தும் விமர்சனம் செய்யும் அளவிற்கு மனப்பாங்கு உடையவராகவும் இருத்தல் வேண்டும். இந்த துறையில் தேவைப்படும் இன்னொரு முக்கிய திறன் என்னவெனில், எது ஒரு செய்தி மற்றும் எது ஒரு செய்தியல்ல என்று பிரித்தறியும் திறன்தான். உங்களை சுற்றி மற்றும் தொலைவில் என்ன நடக்கிறது என்பதை பற்றிய ஆர்வம், கவனிப்பு மற்றும் விழிப்புணர்வு போன்றவையும் முக்கிய தகுதியாகும். மேலும் மனித இனத்தின்பாலான உங்களின் அன்பு, சமூகத்தின் மீதான அக்கறை, தேசப்பற்று போன்றவற்றை முறையாக வெளிப்படுத்துவதும் உங்களின் மதிப்பினை கூட்டும். ஒரு நல்ல நிருபருக்கு உடல் மற்றும் மனரீதியான வலிமை மற்றும் விழிப்புணர்வு தேவை. மேலும் உண்மை எது என்பதைக் ஆய்வுசெய்து கண்டறிய ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்வதும் தேவையாகிறது. பணி பொறுப்பு: * மக்களிடம் பேசி அவர்களை பேட்டி எடுப்பதன் மூலமும், சம்பவங்களை தொகுப்பதன் மூலமும் ஒரு பத்திரிக்கையாளர் செய்திகளையும், தகவல்களையும் பெற வேண்டும். * ஒரு கட்டுரைக்கான பின்னணி தகவலை அமைப்பதற்கு, அதுசம்பந்தமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். * ஒரு செய்தி அல்லது கட்டுரையை வெளியிடும் முன்பாக அதை மதிப்பிட வேண்டும் அல்லது தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். * பிரவுச்சர், செய்தி கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை எழுதவும், திருத்தவும் வேண்டும். * உரைகளை எழுத வேண்டும் மற்றும் மீடியா வெளியீடுகளை தயாரிக்க வேண்டும். பணி வகைகள்: ஒரு தரமான செய்தித்தாளை வெளியிடும் நிறுவனம் என்னென்ன வகையான பொறுப்புகளில் ஆட்களை வைத்திருக்கும் என்ற விரிவான அலசல் தரப்பட்டுள்ளது. செய்திக் குழு: முதன்மை செய்தி ஆசிரியர்: ஒட்டுமொத்த செய்திக் குழுவின் தலைவர் இந்த முதன்மை செய்தி ஆசிரியர்தான். அனைத்து செய்தி அம்சங்களையும் சேகரித்தல், தேர்ந்தெடுத்தல் மற்றும் வழங்குதல் போன்ற அனைத்து வேலைகளையும் அவர் மேற்பார்வை செய்கிறார். மேலும் பலவித பதிப்புகள் கொண்ட செய்தித்தாள்களுக்கு அந்தந்த பதிப்புகளுக்கு பொறுப்பாக ரெசிடண்ட் எடிட்டர் என்று தனித்தனி செய்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அந்தந்த பதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். முதன்மை செய்தி ஆசிரியர் என்பவர் பட்டதாரியாக இருப்பது மட்டுமின்றி, அனுபவம் மற்றும் ஆர்வத்தின் மூலமாக நன்கு படித்த நபராகவும், நாட்டில் நடந்த மற்றும் நடக்கும் சிறிய மற்றும் பெரிய அரசியல் சம்பவங்களைப் பற்றி நுணுக்கமான மற்றும் தெளிவான அறிவு மற்றும் அலசல் கொண்டவராக இருக்க வேண்டும். செய்தி ஆசிரியர்கள்: முதன்மை ஆசிரியரின் வலது கையாக இருப்பவர் இந்த செய்தி ஆசிரியர். அடுத்த நாள் செய்தித்தாள் பதிப்பில் வரக்கூடிய செய்திகள் எவை என்பதை சேகரித்து முடிவு செய்வது இவரின் முக்கியப் பணி. பல இடங்களிலிருந்து செய்தி திரட்டி தருபவர்களின் நெட்வொர்க் மற்றும் வேறு செய்தி கிடைக்கும் மூலங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது இவரின் முக்கியப் பணி. விரைவில் முடிவெடுக்கும் திறன் பெற்றவராகவும், நல்ல தலைமைத்துவ பண்புடையவராகவும் இவர் இருக்க வேண்டும். இந்த பதவியைப் பெற ஒருவர் பட்டதாரியாகவும், போதுமான பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். துணை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை உதவி ஆசிரியர்கள்: இவர்களின் பணி செய்தி ஆசிரியர்களின் பணியை ஒத்தது, அதேசமயம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. இந்த பணியில் சேர்வதற்கு ஒருவர் பட்டதாரியாகவும், போதுமான அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு சிறப்பாகவும், ஆழமாகவும் எழுத தெரிந்திருக்க வேண்டும். முதன்மை உதவி ஆசிரியர் என்பவர், தனக்கு கீழுள்ள பல்வேறு துணை ஆசிரியர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுத்து, அவர்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கிறார். உதவி ஆசிரியர்கள்: ஒவ்வொரு செய்தித்தாள் அலுவலகத்திலும் கணிசமான அளவில் உதவி ஆசிரியர்கள் இருப்பார்கள். செய்தித்தாளுக்கு வரும் அனைத்து செய்திகளையும் வகைப்படுத்தி தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு செய்தியின் மொழிநடையை சிறப்பாக்கி, பிழைகளை சரிப்படுத்தி, தேவையற்றப் பகுதிகளை நீக்கும் வேலையை உதவி ஆசிரியர் செய்வார். எனவே அவருக்கு பகுப்பாய்வு திறனும், விரைவாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் இருக்க வேண்டும். அதேசமயத்தில் அவர் ஷிப்ட் முறையில் பணிபுரியவும் தயாராக இருக்க வேண்டும். நிருபர்கள் மற்றும் சிறப்பு செய்தி வழங்குனர்கள்: ஒரு செய்தித்தாளின் கண்கள் மற்றும் காதுகளாக நிருபர்கள் கருதப்படுகிறார்கள். செய்திகளை மோப்பம் பிடிக்கும் திறமை அவரிடம் இருக்க வேண்டும். அவர் பிறருடன் எளிதில் நெருங்கிப் பழகும் தன்மை உள்ளவராகவும், பல நிலைகளிலிருந்து செய்திகளைப் பெரும் வகையில் ஆட்கள் தொடர்புடையவராகவும் இருக்க வேண்டும். நிருபருக்கு நன்றாக எழுதும் திறமையும் இருக்க வேண்டும். அவர் தன்னை சுய ஒழுக்கம் உள்ளவராகவும், சுய கட்டுப்பாடு உள்ளவராகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். அறிவுத்திறன், பகுப்பாய்வு திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அமைதியான மனோநிலை போன்றவை ஒரு நல்ல நிருபருக்கு தேவையான குணாதிசயங்கள். சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட நிருபர்களே, சிறப்பு செய்தி வழங்குனர்கள்(ஸ்பெஷல் கரஸ்பான்டன்ட்) எனப்படுகின்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய செய்திகளை வழங்குவது இவர்களின் பணி. நிருபராக இருந்து போதிய அனுபவம் பெற்றவர்களே, சிறப்பு செய்தி வழங்குநர்களாக ஆக முடியும். விமர்சகர்கள்: ஒருவர் செய்தி விமர்சகராக ஆகவேண்டுமெனில், குறைந்தபட்சம் குறிப்பிட்ட துறையிலாவது நன்கு விஷயம் தெரிந்தவராக இருக்க வேண்டும். இதில் பல பிரிவுகள் உள்ளன. ஒருவர் அரசியல் விமர்சகராகவோ, விளையாட்டு விமர்சகராகவோ மற்றும் சினிமா விமர்சகராகவோ இருக்கலாம். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் ஆழமான அறிவு பெற்றிருக்க வேண்டும். இந்த பொறுப்புகளை தவிர, செய்தித்தாள் நிறுவனங்களில் வேறு பல பொறுப்புகளும் உள்ளன. அவை, * லீடர் ரைட்டர், ட்ரெய்னீ ரைட்டர், செய்தி போட்டோகிராப்பர்கள், சர்குலேஷன் மேனேஜர், சர்குலேஷன் எக்சிகியூடிவ், விளம்பர மேனேஜர், விளம்பர எக்சிகியூடிவ், நிர்வாக மேலாளர், சீனியர் கிளார்க், கிளார்க், அக்கவுண்ட்ஸ் மேனேஜர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், பிரிண்டிங் மெஷின் ஆப்பரேட்டர், லைப்ரரியன் மற்றும் ஆய்வாளர்கள். வானொலி மற்றும் தொலைக்காட்சி துறை: மீடியா துறையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதுடன், ஏராளமான மீடியா சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. சாத்தியப்பட்ட இடத்திற்குள் நுட்பத்தை கொண்டுவருவதே இத்துறைகளுக்கு தேவைப்படும் முக்கிய திறமையாகும். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நிருபராக இருப்பவருக்கு சிறப்பான எழுத்து திறன் இருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி நிருபர் அடிக்கடி கேமராவுடனும், குழுவுடனும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. செய்தி கொடுக்க வேண்டிய விஷயத்தை தேர்ந்தெடுப்பது, பின்னணியை தேர்ந்தெடுப்பது, செய்தி எழுதுதல் மற்றும் செய்தியை கேமராவில் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கு அவர்தான் பொறுப்பு. இத்துறையில் கிடைக்கும் சம்பளம்: ஊடகத் துறையில் பொதுவாக நல்ல சம்பளம் தரப்படுகிறது என்றாலும், சம்பள விகிதம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. பெரிய நகரங்களில் பணிபுரியும் பயிற்சி காலத்திலுள்ள ஊடகவியலாளர் 6 மாதங்கள் முடிந்த பிறகு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறுகிறார்கள். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு துணை ஆசிரியர் மற்றும் சீனியர் நிருபர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை பெறுகிறார்கள். தேசிய நாளிதழ்களில் பணிபுரியும் செய்தி ஆசிரியர்கள் ரூ.1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை மாத ஊதியமாக பெறுகிறார்கள். படிப்பு மற்றும் பயிற்சிகள்: நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆக விரும்பினால், அதற்கு முறையான பயிற்சி பெற வேண்டும். தற்போது அதிகளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊடகத்துறை சம்பந்தமான பயிற்சிகளை அளிக்கின்றன. இந்த துறையைப் பொறுத்தவரை, ஒருவர் என்னதான் பட்டப்படிப்பு படித்து பயிற்சி எடுத்தாலும், சுவாரஸ்யமாகவும், சிறப்பாகவும் செய்திகளை எழுதும் மற்றும் உருவாக்கும் திறமையை பெற்றிருக்க வேண்டும். பள்ளி படிப்பை முடித்தவுடன் இளநிலை பட்டப் படிப்புகள் மற்றும் அதன்பிறகான முதுநிலை பட்டப் படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் போன்றவை பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. ஊடகம் சம்பந்தமாக இருக்கும் படிப்பின் வகைகள்: * ஜர்னலிசம்/மாஸ் கம்யூனிகேஷன் துறையில் இளநிலை பட்டப் படிப்பு * பி.ஏ.(ஹானர்ஸ்) ஜர்னலிசம் * 3 வருட பி.ஏ.(ஹானர்ஸ்) ஹிந்தி பத்ரகரிதா * பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் ஜர்னலிச சான்றிதழ் படிப்புகள் (பள்ளி படிப்பிற்கு பிறகு) * எம்.ஏ. ஜர்னலிசம்/மாஸ் கம்யூனிகேஷன் இந்த படிப்புகளை பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.                


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !