உள்ளூர் செய்திகள்

மாணவர்களை வரவேற்பில் பயன்படுத்த தடைகோரிய வழக்கு - நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மதுரை: அனைத்துப் பள்ளிகளையும் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் பங்கேற்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பணி நியமனம் செல்லாது என்ற ஐகோர்ட் உத்தரவிற்கு, சுப்ரீம் இடைக்காலத் தடை விதித்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் 50 பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் பங்கேற்கத் தடை விதிக்க பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்