உள்ளூர் செய்திகள்

தனியார் வாயிலாக அரசு விடுதிகளுக்கு உணவு வழங்க திட்டம்: சமையலர்கள் பணிக்கு ஆபத்து

மதுரை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், மாநில அளவில் 1,453 பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் தங்கியுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக பள்ளி விடுதிக்கு ஒரு மாணவருக்கு தலா 1,100 ரூபாய், கல்லுாரி மாணவருக்கு தலா 1,500 ரூபாய் என மாதந்தோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.தற்போது இவ்விடுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப சங்கங்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களின் விடுதிகளில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு 3 வேளைகளும் தனியார் வாயிலாக உணவுகள் சமைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இதற்காக ஒருங்கிணைந்த நவீன சமையறைக் கூடங்கள் அமைத்து, 7 கிலோ மீட்டருக்குள் உள்ள விடுதிகளுக்கு சமைத்த உணவுகளை வேன்களில் கொண்டு சென்று சப்ளை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் தற்போதுள்ள காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு இந்த முறையில் தான் உணவு வழங்கப்படுகிறது. ஆனால் சமையல் கூடம், சமையலர்கள் உள்ளிட்ட வலுவான கட்டமைப்புகள் கொண்ட அரசு விடுதிகளிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆசிரியர் காப்பாளர்கள் சங்க மாநில தலைவர் மணிமொழி கூறுகையில், சென்னையில் மட்டும் இத்துறையின் கீழ், ஒருசில விடுதிகளில் இம்முறை செயல்பாட்டில் உள்ளது. உணவு தரமாக இல்லை, சரியான நேரத்திற்கு கிடைப்பதில்லை என பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட்டு, விடுதிகளில் காலியாக உள்ள சமையலர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன் வர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்