மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது முடியும்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி எப்போது துவங்கி, எப்போது நிறைவடையும் என்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம், 2018 ஜூன் 20ல் தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் 2019 ஜனவரி, 27ல் அடிக்கல் நாட்டினார்.எய்ம்ஸ் கட்டுமான பணியை விரைவுபடுத்த உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கனவே சில வழக்குகள் தாக்கலாகின. குறித்த கால வரம்பிற்குள் கட்டுமான பணியை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.எவ்வித முன்னேற்றமும் இல்லை; திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. 2015ல் வெளியான அறிவிப்பின்படி, பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து செயல்பட துவங்கியுள்ளன.தோப்பூரில் குறித்த கால வரம்பிற்குள் கட்டுமான பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.மத்திய அரசு தரப்பு, கொரோனா காலத்தால் தாமதம் ஏற்பட்டது. கட்டுமான பணிக்கு, 2024 மார்ச் 4ல் டெண்டர் விடப்பட்டது. கட்டுமானம் துவங்கியதிலிருந்து, 33 மாதங்களில் பணி நிறைவடையும் என, தெரிவித்தது.நீதிபதிகள், கட்டுமான பணி எப்போது துவங்கி, நிறைவடையும் என்பதற்கு கால வரம்பு நிர்ணயித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர், செப்., 24ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர்.