அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: ஒவ்வொரு தாலுகா தலைநகரிலும் அரசு மேல்நிலை பள்ளிகளை துவக்க முடியவில்லை எனில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டு சலுகையை உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் புபேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தமிழக அரசு வழங்குகிறது. ராமநாதபுரம் நகர் பகுதியில் ஆண்களுக்கான அரசு மேல்நிலை பள்ளி இல்லை. ஏழை மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் இடைநிற்றல் அதிகரிக்கிறது.ராமநாதபுரத்தில் ஆண்கள் மேல்நிலை பள்ளி துவக்கக்கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அனுமதிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு 2021 ல் பரிந்துரைக்கப்பட்டது.அது நிலுவையில் உள்ளது என முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை சமர்ப்பித்தார். உயர்நிலை பள்ளியாக மாற்றக்கோரும் பரிந்துரை 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த 10 முதல் 15 ஆண்டுகளாகும்.ராமநாதபுரத்தில் ஆண், பெண், இருபாலர் என 6 உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. மற்ற பள்ளிகள் 9 கி.மீ., துாரத்தில் உள்ளன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அச்சலுகை உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இல்லை. ஒவ்வொரு தாலுகா தலைநகரிலும் அரசு மேல்நிலை பள்ளிகளை துவக்க முடியவில்லை எனில், இட ஒதுக்கீட்டின் சலுகையை உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அக்.,14ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.