உள்ளூர் செய்திகள்

வாட்ஸாப் குழுவில் மாணவர்கள் மொபைல் எண் தகவல் தெரிவிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதி!

திருவாலங்காடு: பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு பதிலாக, மாணவர்கள் சிலர், அவர்களது எண்களையே ஆசிரியர்களிடம் அளிப்பதால், பள்ளி விபரங்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில், 944 துவக்கப் பள்ளிகள், 265 நடுநிலைப் பள்ளிகள், 145 உயர்நிலைப் பள்ளிகள், 118 மேல்நிலைப் பள்ளிகள் என, 1,472 அரசு பள்ளிகள் உள்ளன.இங்கு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் வாயிலாக, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பிட்ட சில பள்ளிகளில், மாணவர்களின் தனித்திறன், சுய ஒழுக்கம் போன்ற விபரங்களை பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், வகுப்பு ஆசிரியர், தலைமையாசிரியரை உள்ளடக்கி, வாட்ஸாப் குழுவும் ஏற்படுத்தப்படுகிறது.இதற்காக, பெற்றோரின் மொபைல்போன் எண்ணும் கோரப்படுகிறது. ஏதேனும் தகவல் இருந்தால், அதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சில மாணவர்கள், பெற்றோரின் எண்ணுக்கு பதிலாக, அவரவரின் மொபைல்போன் எண்களை வாட்ஸாப் குழுவுக்கு அளிப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் கற்றல் திறனை பெற்றோருக்கு தெரிவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து, திருவள்ளூரைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் கூறியதாவது:ஒவ்வொரு வாரமும் கற்றல் திறனில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், பயிற்சி ஏடுகள் வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மாணவர்களின் கற்பித்தல் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது.இதில், முன்னேற்றம் இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வர். ஆனால், ஆசிரியர்கள் அளிக்கும் தகவல் பெற்றோருக்கு தெரிவதில்லை. இதனால், மாணவர்களை கண்டிக்கவும், பள்ளி விபரங்களை பெற்றோருக்கு தெரியப்படுத்தவும் முடிவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்