பதக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக மாணவி புகார்: நெல்லை பல்கலை.,யில் திடீர் பரபரப்பு
திருநெல்வேலி: நெல்லை பல்கலை., நிர்வாகம் பதக்க வாய்ப்பை மறுத்தது குறித்து துணைவேந்தரிடம் குமரி மாணவி புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை பல்கலை.,யின் 21வது பட்டமளிப்பு விழா இன்று (23ம் தேதி) காலை 10 மணிக்கு பல்கலை., வளாகத்தில் நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் ரோசய்யா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்நிலையில் நேற்று குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் படித்த மாணவி தனக்கு ரேங்க் மறுக்கப்பட்டதாக பல்கலை., நிர்வாகத்திடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ராஜாக்கமங்கலம் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் எம்.பில்., மைக்ரோபியல் டெக்னாலஜி படித்தவர் ஆர்த்தி. இவர் கடந்த 2011-12ம் ஆண்டி எம்பில்., படித்தார். தேர்வில் 500க்கு 414 மதிப்பெண் பெற்று பல்கலை., அளவில் முதலிடம் பிடித்து, தங்க பதக்கம் பெறுவதற்கான வாய்ப்பை பெற்றார். பல்கலை., இணையதளத்தில் இவரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவி பல்கலை., முதலிடம் இடம் பெற்றிருப்பதாக அறிந்த ஆர்த்தி, அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் தனக்கு பதக்கம் பெறும் தகுதியிருந்தும், பதக்கம் பெறுபவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது குறித்து துறை தலைவரிடம் முறையிட்டார். அவரிடமிருந்து முறையான பதில் வரவில்லை. மாணவி ஆர்த்தி நேற்று மாலை உரிய ஆவணங்களுடன், பல்கலை., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாகரை சந்தித்து ரேங்க் வழங்குமாறு முறையிட்டார். அப்போது 2012 செப்டம்பர் 15ம் தேதி தாக்கல் செய்ய வேண்டிய ஆய்வுக் கட்டுரையை, டிசம்பர் மாதம் தாக்கல் செய்ததால் பதக்கம் பெறுவதற்கான வாய்ப்பை இழந்ததாக தேர்வாணையர் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் மாணவி ஆர்த்தி, குறிப்பிட்ட தேதியில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்ததாக தெரிவித்தார். இதனையடுத்து மாணவி ஆர்த்தியை, பல்கலை., துணைவேந்தர் குமரகுருவிடம் அழைத்து சென்றனர். அங்கு மாணவியிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து தேர்வாணையர் பிரபாகரிடம் கேட்டபோது, "மாணவி ஆர்த்தி ஆய்வு கட்டுரையை 2012 டிசம்பர் 6ம் தேதி சமர்ப்பித்துள்ளார். அதனால் ரேங்க் வாய்ப்பை மாணவி இழந்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து துணைவேந்தரிடம் ஆலோசித்துள்ளோம்" என்றார். பட்டமளிப்பு விழா நடக்கவுள்ள நிலையில் மாணவி ஒருவர், பல்கலை.,க்கு எதிராக புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.