மாணவர்களின் விபரங்களை பதிவுசெய்ய புதிய சாப்ட்வேர்; தாய் பெயரையும் சேர்க்க உத்தரவு
விருதுநகர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில், ஆப்லைனில் பதிவு செய்யும் பணிக்காக, பள்ளிகளுக்கு புதிய சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள இத்தேர்வுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதவுள்ளோர் பெயர், பள்ளி உள்ளிட்ட விவரங்கள் www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலக தேர்வுப்பிரிவு, கம்ப்யூட்டர் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அவர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்கிடையே பெயர்களை பதிவேற்றம் செய்வதற்கான சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவரின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவதற்கு சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து பணியை துவங்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரங்களை சரிபார்த்தபின், தேர்வுத் துறை கூறும் நாட்களில் அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார். தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க உத்தரவு பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும்போது, தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும் என, அரசு தேர்வுகள் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தந்தை பெயருடன், தாய் பெயரையும் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவால், மாணவரின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பாடம், மீடியம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் தாய் பெயரும் சேர்த்து புகைப்படத்துடன், ஆப்லைனில் பதிவுசெய்யும் பணி நடக்கிறது. இதன் விபரங்களை சிடியில் பதிவு செய்து நாளை(டிச.,8க்குள்) மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரின்ட் அவுட் எடுத்து வகுப்பறைகளில் ஒட்டி மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும், அதில் திருத்தம் இருந்தால் திருத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொதுத்தேர்வு எழுதும் மாணவரின் பெயருடன் தந்தை பெயர் மட்டுமே பதிவு செய்யப்படும். ஒரு சில மாணவர்களின் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருக்கும்போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், சட்டரீதியாக தந்தை விவாகரத்து பெற்று பிரிந்த பின் தாயிடம் மாணவர் வளர்ந்தால் அதனடிப்படையில் தாய் பெயரை பதிவு செய்யவும் இந்தமுறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாணவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகொண்டுவர வேண்டும். ஆனால் அது கட்டாயமில்லை. இன்ஷியலில் தாய் பெயரை சேர்ப்பதற்கான அரசாணை ஏற்கனவே உள்ளது" என்றார்.