குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள்! இல்லம் தேடி கல்வி மையத்தில் புது முயற்சி
கோவை: இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு, வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தும் வகையில், 20 கதை புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், 5 ஆயிரத்தும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு, எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, மாலை நேர டியூஷன் வகுப்பு எடுக்கப்படுகிறது.இதற்கு தன்னார்வலர்களுக்கு அவ்வப்போது, பயிற்சி வழங்கப்படுகிறது. பாட சந்தேகங்களை விளக்குவதோடு, கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, அடிப்படை கல்வி பயிற்சியும் மையத்தில் அளிக்கப்படுகிறது.இங்கு குழந்தைகள் ஆர்வமாக வருகைப்புரிவதால், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, மையத்திற்கு தலா 20 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த பக்கங்கள் கொண்ட இந்த புத்தகங்களை, தினசரி மாணவர்கள் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் வாரத்திற்கு இரு பாடவேளைகளே, நுாலக வகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. தினசரி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி மையத்தில் வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் கூறுகையில், எளிய வார்த்தைகளுடன், குறைந்த பக்கங்கள், அதிக படங்கள் கொண்ட, குழந்தைகள் ஆர்வமாக வாசிக்கும் புத்தகங்களே வழங்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களையும் வாசித்த, மாணவர்களின் பெயர்கள் பட்டியலிட்டு, சிறப்பு பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி வாசிக்கும் போது, பிழையின்றி எழுதும் பழக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்றனர்.