ஒரே கட்டடத்திற்கு ஐந்து டெண்டர்; வேளாண் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடு புகார்
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கட்டுப்பாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் செட்டிநாடு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணிகளில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 16 வேளாண் அறிவியல் மையங்கள், 44 ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. புதிதாக, நான்கு கல்லுாரிகள் 2022ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டத்தில், செட்டிநாடு வேளாண் கல்லுாரிக்கான கட்டுமான ஒப்பந்தங்கள் நிறைவு பெற்று, பணிகள் நடந்து வருகின்றன. அகாடமி பிளாக், ஆய்வகம், விடுதி, மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தும் வகையில், 62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 250 ஏக்கர் நிலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.ரூ.62 கோடி மதிப்புள்ள பணி என்பதால், ஒப்பந்தம் சார்ந்த செயல்பாடுகளில் பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. இதை தவிர்க்க, புதிய கல்லுாரி கட்டுமான பணிகளை, நான்காக பிரித்து, நான்கு பேருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.ஒரு ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில், ஒரே இடத்தில் கட்டப்படும் கட்டடமும், 6 கோடி ரூபாய்க்கு குறைவாக மதிப்பீடு தயாரித்து ஹால், ஆய்வகம் என தனித்தனி டெண்டர் விடப்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. அவ்வாறு, ஒவ்வொரு ஒப்பந்த பணிகளுக்கும் கோடிக்கணக்கில் கமிஷன் பேரம் பேசப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.கல்லுாரிக்கான ஒட்டுமொத்த தொகையும் வைத்து டெண்டர் விடப்பட்டு இருப்பின், பெரிய நிறுவனங்கள் இப்பணிகளை கையில் எடுத்து, விரைவில் முடிந்து இருக்கும். ஆனால், கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்லுாரிக்கான ஒப்பந்தத்தை பலவகையில் பிரித்துள்ளதால், பணியின் தரம் கேள்விக்குரியதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டடம் கட்டும் முன், கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால், கல்லுாரிக்கு சாலை வசதிகளை முதலில் செய்ய, தலைமை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது அவலத்தின் உச்சம். இதுகுறித்து, வேளாண் பல்கலை தரப்பில் ஒருவர் கூறுகையில், ஒப்பந்தம் முடிந்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட சிலருக்கு ஒப்பந்தம் வழங்கும் நோக்கில், பல மோசடி, முறைகேடுகள் அரங்கேறியுள்ளன.மொத்தமாக கல்லுாரி கட்டுமான பணிகளை, ஒரு நிறுவனத்திடம் விடவேண்டும்; அதுவே வழக்கத்தில் உள்ளது. அதை நான்காக பிரித்து, அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு தந்துள்ளனர். இதை விட அபத்தம் என்னவென்றால், ஒரு கட்டடத்தை ஐந்தாக பிரித்து, ரூ.6 கோடிக்கு கீழ் மதிப்பீட்டை குறைத்து, ஒருவருக்கே ஐந்து டெண்டராக வழங்கியுள்ளனர்.இதற்கு உடன்படாத அனைத்து அலுவலர்கள், பொறியாளர்கள், டீன் ஆகியோரை இடம் மாற்றம் செய்து, அவர்களுக்கு ஒத்துப்போகும் நபர்களை வைத்து, பணிகளை நடத்தி வருகின்றனர். இதில், பல்கலை உயர்மட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு உண்டு; துறை அமைச்சர் தலையீடும் உள்ளதாக தெரிகிறது. உடனடியாக, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.வேளாண் பல்கலை டீன் ரவீந்தரனிடம் கேட்டபோது, நான்கு புதிய கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. செட்டிநாடு கல்லுாரிக்கு சென்று வருவதற்கு, போதிய சாலை இல்லை என்பதால், முதலில் சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டடமும் தனித்தனியாக இருக்கும்; அனைத்தும் மொத்தமாக கொடுத்தால் தாமதம் ஆகும் என்பதால் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள், விதிமுறை பின்பற்றியுள்ளனரா என்பதை உறுதி செய்துள்ளோம். ஒரு குழுவாக இருந்தே முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன, என்றார்.