பாஸ் ஆக்குங்க.. இல்லைனா கல்யாணம் கட்டி வச்சுருவாங்க..: தேர்வுத்தாளில் கெஞ்சிய மாணவி
பாட்னா: பீஹாரில் 10ம் வகுப்பு தேர்வு ஒன்றில், எனக்கு பாஸ் மார்க் போடுங்கள், இல்லையெனில் எனது தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார் என மாணவி ஒருவர் கெஞ்சி எழுதியுள்ளது வைரலாகியுள்ளது.தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையெழுதினால்தான் மார்க் கிடைக்கும் என்பது வழக்கமான ஒன்றுதான். அதில் பாஸ் மார்க் வாங்குவதில் பலரும் படாதப்பாடு படுகின்றனர். அப்படியிருக்கையில் பீஹாரில் தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் &'சென்டிமென்டாக&' சில வாக்கியங்களை எழுதி, தங்களை பாஸ் ஆக்குமாறு கெஞ்சியுள்ளனர்.பீஹாரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்.,15 முதல் 23 வரை நடைபெற்றது. இதற்கான விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தில் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே பாஸ் என்ற நிலையில், சில மாணவர்கள் படித்து மார்க் வாங்க முடியாது என்று எண்ணி, புதுவிதமான முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.ஒரு மாணவி, என் தந்தை ஒரு விவசாயி. கல்விச் சுமையை எங்களால் தாங்க முடியவில்லை. எனக்கு பாஸ் மார்க் போடுங்க; நான் பெயிலானால் என் அப்பா உடனடியாக எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்; என் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள். நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்&' என விடைத்தாளில் எழுதியுள்ளார். இந்த விடைத்தாளின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.மேலும் சிலர், எனக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் சினிமா பாடல்கள், காதல் கவிதைகள், கதைகள் என்று கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்துள்ளனர். மாணவர்கள் எந்தவகையில் கோரிக்கை வைத்தாலும், கேள்விக்கான விடை இருந்தால் மட்டுமே மார்க் போட முடியும் என விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.