பள்ளி நேரத்தில் மாணவர்கள் சாலை மறியல்; ஆசிரியர்களை கடிந்து கொண்ட போலீசார்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டியில் வேகத்தடை அமைக்கக் கோரி, பி.ஏ., கல்வி நிறுவன மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, புளியம்பட்டியில், பி.ஏ., கல்விக் குழுமத்தின் பள்ளி மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், நேற்று, காலை, 11:00 மணிக்கு, திடீரென பள்ளி வளாகத்தில் இருந்து, சீருடையில் வெளியே வந்த மாணவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்பகுதியில், பல்லடம் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கையை வலியுறுத்தி, மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், கோஷமிட்டும், ரோட்டில் அமர்ந்தனர். இதனால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் வந்து பேச்சு நடத்தினர். அப்போது, முறையாக அனுமதி பெறாமல், பள்ளி நேரத்தில், மாணவர்களை சாலை மறியலில் ஈடுபட்டதற்கு யார் காரணம் என போலீசார் கேள்வி எழுப்பினர்.மேலும், வேகத்தடை அமைக்க வேண்டுமெனில், நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருக்கலாம். அதற்கு தீர்வு கிடைக்காவிடில், போலீசார் உதவியுடன் பேரிகார்டு அமைத்திருக்கலாம் என ஆசிரியர்களை போலீசார் கடிந்து கொண்டனர்.இதையடுத்து, அங்கு வந்த பொதுமக்களும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், சாலை மறியலில் ஈடுபடச் செய்வதா? பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.இருப்பினும், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.