உள்ளூர் செய்திகள்

பொது அறிவு புத்தகங்களை படிக்க வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை

விழுப்புரம்: பொது அறிவு புத்தகங்களை படித்தால்தான் அரசு வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற முடியும் என அமைச்சர் பொன்முடி பேசினார்.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசியதாவது:இந்த பள்ளியில் 2,089 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர், பள்ளி, கல்லுாரி பயிலும் மாணவர்களுக்கு கல்வியோடு, விளையாட்டு திறனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களிடையே விளையாட்டு திறன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் பல விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார்.மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய காலகட்டமாகும். நீங்கள் அவ்வப்போது ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படித்து முடிக்க வேண்டும். பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். அப்போது தான், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும்.பொது அறிவு புத்தகங்களையும் பயில வேண்டும். அப்போது தான் அரசு வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெல்ல முடியும். நாம் வாழ்வில் உயர்நிலையை அடைந்தே தீர வேண்டும்.இவ்வாறு பொன்முடி பேசினார்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமை ஆசிரியை சசிகலா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.கலெக்டருக்காக காத்திருந்த அமைச்சர்நிகழ்ச்சிக்கு, நேற்று காலை 9:25 மணிக்கு அமைச்சர் பொன்முடி வருகை புரிந்தார். கலெக்டர் பழனி, வராததால், அமைச்சர் நிகழ்ச்சியை துவங்காமல் காத்திருந்தார். 9.35 மணியளவில் அமைச்சர் வந்த தகவலறிந்து கலெக்டர் பள்ளிக்கு வருகை தந்தார். டென்ஷனான அமைச்சர் அனைவரின் மத்தியிலும் கலெக்டருக்கு டோஸ் விட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்