யு.ஜி.சி.,க்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்; ஆதரவு தெரிவித்து அமைச்சர் கருத்து
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டசபை தொகுதிகளில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் பங்கேற்றார்.அப்போது, யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை, மத்திய அரசு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி, பேராவூரணி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், ஒட்டங்காடில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.உடனே, காரை விட்டு இறங்கிய அமைச்சர் செழியன், யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை, மத்திய அரசு திரும்ப பெறும் வரை, தமிழக அரசு போராடும், மாணவர்கள் யு.ஜி.சி., செயலருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசு துணையாக இருக்கும் என மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்து சென்றார்.இது குறித்து அமைச்சர் செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு, யு.ஜி.சி.,யை கைபாவையாக பயன்படுத்தி, பல்கலைகழக அங்கீகாரங்களை ரத்து செய்யப்படும் என மிரட்டுவது, கல்வித்துறை மீதுள்ள மத்திய அரசின் சர்வாதிகார போக்கு. மேலும், மாணவர்களின் நலனை சீர்குலைக்கும் வகை செயலாகும்.சட்டசபையில் தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி, யு.ஜி.சி., செயலருக்கு மாநிலம் முழுதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி இ-மெயில் கடிதம் அனுப்பி வருகின்றனர். வரும் பிப்., 5 வரை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்து கூறலாம்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் ஒன்பது மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். முன்மாதிரியாக கேரளா அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆந்திராவிலும் யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வைக்க முயன்று வருகிறது.கடந்த 1965ம் ஆண்டு, ஹிந்து எதிர்ப்பு போராட்டம் மூலம் மொழியை காத்தது போல, யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.