பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிகள் இரவு காவலர்கள் நியமிக்க வேண்டும்
திருவாடானை: திருவாடானை வட்டாரத்தில் 40 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. போதிய பாதுகாப்பு இல்லாததால் இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறி வருகிறது. அரசுப் பள்ளிகளில் தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு நவீன முறையில் பாடம் நடத்துவதற்கும் ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் துவக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தொடக்க பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, நடுநிலை பள்ளிகளுக்கு ைஹடெக் லேப் வசதி அறிவிப்பு வெளியானது. திருவாடானை வட்டாரத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.இதில் முதல்கட்டமாக 40 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும். அரசு பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக்கும் பணிகள் நடந்தாலும் அனைத்தும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் ரூ.50 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லை.எனவே தற்காலிமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளாட்சி துறைகளின் வாயிலாக இரவுக்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசும் பள்ளிக்கல்வித்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.