சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் தொடர் சைபர் தாக்குதல்: வழக்கு பதிந்தது டில்லி போலீஸ்
புதுடில்லி: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான இணையதளம் மீது தொடர் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக டில்லி போலீசில் சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் புகார் அளித்து உள்ளது.மத்திய அரசின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ., இந்தாண்டு நடத்திய பிளஸ் 2 பொதுத் தேர்வை, நாடு முழுதும், 18.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.குளறுபடிஇந்தாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் ஓ.எஸ்.எம்., எனப்படும், 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற கணினி திரை வழியிலான மதிப்பீட்டு முறையில் திருத்தப்பட்டன.தேர்வு முடிவுகள் வெளியான போது, லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக மாணவர்களும், பெற்றோரும் சி.பி.எஸ்.இ., நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.இதையடுத்து, மாணவர்களின் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதில், விடைத்தாள்கள் தெளிவாக தெரியவில்லை என்றும், சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.தேர்வு முடிவுகளுக்கான பக்கத்தில் தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் காரணமாக இந்த குளறுபடிகள் ஏற்பட்டதாக சி.பி.எஸ்.இ., தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.இந்நிலையில், சைபர் தாக்குதல் தொடர்பாக, சி.பி.எஸ்.இ., தரப்பில் டில்லி போலீசில் அளிக்கப்பட்ட புகார்:பிளஸ் 2 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் சி.பி.எஸ்.இ., இணையதளம் மீது கடந்த சில நாட்களாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.மதிப்பெண் சரிபார்ப்பு, மறுமதிப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்காக பக்கம் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த இணையதளத்தில் வழக்கத்துக்கு மாறான அதிகப்படியான வருகை பதிவாகியுள்ளது.தரவு தொகுப்புஇதில், சேவைகளை முடக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் அடங்கும். இரண்டு நிமிடங்களுக்குள் 15 லட்சம் வருகைகள் பதிவாகியுள்ளன. இந்த பக்கத்தில் உள்ள கோப்புகளை அணுக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இணையதளத்தின் கட்டமைப்பை செயலிழக்க செய்யும் வகையில், 38 லட்சம் தீங்கிழைக்கும் தரவுத் தொகுப்புகள் வாயிலாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெற்றிகரமாக தடுக்கப்பட்டன. தேர்வு தொடர்பான பதிவுகள் மற்றும் மாணவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, வழக்குப் பதிந்து டில்லி போலீசார் விசாரிக்கின்றனர்.