தனியார் பள்ளிகள் உரிமம் பெற ஜூலை முதல் ஆன்லைன் வசதி
சென்னை: “தனியார் பள்ளிகள் உரிமம் பெற, அடுத்த மாதம் முதல், 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்படும்,” என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 848 தனியார் பள்ளிகளுக்கு, புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை வழங்கி, அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:கல்வி அமைச்சகம் விதித்துள்ளபடி, உரிய உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை, தனியார் பள்ளிகள் சரியாக செயல்படுத்தினால், அதிகாரிகளின் ஆய்வில், தேர்ச்சி பெறுவது எளிது.உரிய காரணிகள் உள்ள பள்ளிகளின் உரிமம் நீட்டிப்பை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தடையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்காக, இனி யாருக்கும், யாரும் ஒரு பைசா கூட லஞ்சம் தர தேவையில்லை.அதற்கு பதிலாக, பள்ளிகளின் தரத்தில், சமரசம் செய்யாமல், நேர்மையாக தனியார் பள்ளி நிர்வாகிகள் செயல்பட வேண்டும். இது போன்ற செயல்பாடுகளில், தலையீடுகளை தவிர்க்கும் வகையில், ஜூலை முதல், 'ஆன்லைன்' வாயிலாக, விண்ணப்ப செயல்பாடுகள் மாற்றப்படும்.அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், மாணவர், பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில், பள்ளிக்கட்டண விபரத்தை, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதனால், பள்ளியில் சேர்க்கை சதவீதம், எந்தவிதத்திலும் குறையாது.இவ்வாறு அவர் பேசினார்.