இருளர் பழங்குடியின மக்களின் மொழியை பாதுகாக்க பாரதியார் பல்கலை சார்பில் 1.84 கோடி
ஊட்டி: மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும், இருளர் பழங்குடியின மக்களின் மொழியை பாதுகாக்கும் திட்டத்துக்காக, பாரதியார் பல்கலை சார்பில், 1.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, என, பல்கலையின் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறினார். கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை, ஊட்டியில், நிருபர்களிடம் கூறியதாவது: பாரதியார் பல்கலையில், முதன்முறையாக தொலை துார கல்வி வாயிலாக, எம்.எட்., படிப்பு போதிக்கப்படுகிறது. பாதுகாப்புதுறை தொடர்பான, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, அரசு இரண்டாம் கட்டமாக, 24 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மரபியல் மூலக்கூறு தொடர்பான ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட மூன்று மாணவர்கள், ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்றுள்ளனர். வரும் கல்வியாண்டில், பல்கலைக்கழக அளவில், முதன்முறையாக, உயிரி வேதியியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு யு.ஜி.சி., அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில், நடப்பாண்டு, மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் மொழியை பாதுகாப்பதற்குரிய ஆராய்ச்சிகள், திட்டங்களை மேற்கொள்ள, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில், சர்வதேச தரத்திலான, எட்டு நீச்சல் குளங்கள் அமைக்க, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு, மருத்துவ இயற்பியல் துறையில், கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகளில், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு, துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறினார்.