உள்ளூர் செய்திகள்

பள்ளிகளின் கற்றல் - கற்பித்தல் நாட்களை அதிகரிக்க வலியுறுத்தல்

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் மணி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நாட்கள், ஒரு ஆண்டுக்கு 200 நாட்களாக இருக்கிறது. இதில், கணிசமான நாட்கள், தேர்வு நடைபெறும் நாட்களாக இருக்கின்றன. மாணவர்களுக்கு, கற்றல் - கற்பித்தல் நடைபெறும் நாட்களை அதிகரிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. தலைமை ஆசிரியர்கள், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு வகுப்புகளையாவது பார்வையிட வேண்டும். அப்போது, ஆசிரியர், பாடம் நடத்தும் முறை உள்ளிட்ட அம்சங்களை கவனித்து, அதை தனது பதிவேட்டில் பதிய வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர்கள் என்ன பாடம் நடத்தினர், கற்பித்தலுக்கு பயன்படுத்தப்பட்ட துணைக்கருவிகள் உள்ளிட்ட விவரங்களை, வகுப்பில் உள்ள பதிவேட்டிலேயே ஆசிரியர்கள் குறிப்பிட்டு, அதை சரியாக பராமரிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், விரைவில் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள இருப்பதால், இந்த மாணவர்களுக்கு வழக்கமான தேர்வுகளுடன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முழுமையான பாடத் திட்டங்களை உள்ளடக்கி, இரு திருப்புத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். இலவச லேப்-டாப், இலவச சைக்கிள், இலவச சீருடைகள் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சென்றடைவதை, அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு மணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்