தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மறுக்கும் மாணவர்கள்
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தில், வலியம்புரா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள, துவக்க பள்ளியில், 176 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன், இந்த பள்ளியில், மதிய உணவு சமைப்பதற்கான பணிக்கு, பாவ்னா சசுபாய் வாங்கர், 42, என்ற பெண், நியமிக்கப்பட்டார். இந்த தகவல், அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள், தங்களின் குழந்தைகளிடம், "அந்த பெண், சமைக்கும் உணவை, இனி சாப்பிட வேண்டாம்" என, விநோதமான, மிரட்டலை பிறப்பித்தனர். குழந்தைகளும், தங்களின் பெற்றோருக்கு பயந்து, சமீப காலமாக, பள்ளியில், மதிய உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். இதுகுறித்து பாவ்னா கூறியதாவது: நான், பணிக்கு சேர்ந்ததில் இருந்தே, மேல் தட்டு வகுப்பைச் சேர்ந்த, மாணவர்கள், மதிய உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். அவர்களின் பெற்றோர் மிரட்டுவதே, இதற்கு காரணம். நான், சமையல் பாத்திரங்களை தொடக் கூடாதாம். இவ்வாறு, பாவ்னா கூறினார். இதுகுறித்து, பள்ளியின் முதல்வர் ஜெயந்திபாய் கூறுகையில், "இந்த விவகாரத்தால், கிராம மக்கள், எனக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளேன். விரைவில், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, நம்புகிறேன்,&'&' என்றார். சபர்கந்தா மாவட்ட கலெக்டர், ஷா மீனா உசேன் கூறியதாவது: இந்த தகவல், எங்களுக்கும் கிடைத்தது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அதிகாரிகளை அனுப்பி, விசாரித்தோம். அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்கின்றனர். சம்பந்தப்பட்ட பெண், சில நாட்களாக, பணிக்கு வரவில்லை. இருந்தாலும், இந்த விவகாரம் குறித்து, மேலும் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக, யாராவது குழந்தைகளை மிரட்டியிருந்தால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஷா மீனா கூறினார்.