உள்ளூர் செய்திகள்

பிஸியோதெரபிஸ்ட் கவுன்சில் அமைக்க அரசு உறுதியளிப்பு: மாணவர்கள் போராட்டம் வாபஸ்

திருச்சி: "தமிழ்நாடு பிஸியோதெரபிஸ்ட் கவுன்சில்" அமைக்க, தமிழக அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, திருச்சியில் பிஸியோதெரபிஸ்ட் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பிஸியோதெரபிஸ்ட்களை போலி மருத்துவர்கள் என்றும், அவர்களை டெக்னீஷியன்கள் என்றும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறிய கருத்தை ஊடகங்கள் முன் வாபஸ் பெற வேண்டும்.மற்ற மாநிலங்களில் உள்ளது போல், தனியாக அரசின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் வகையில், "தமிழ்நாடு மாநில பிஸியோதெரபி கவுன்சில்" அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நரம்பியல், முடநீக்கியல், குழந்தைகள் நலம், தீக்காயம், சுவாசப் பிரிவு ஆகிய ஒவ்வொரு துறைகளிலும் முதுநிலை படிப்பு முடித்த ஒரு பிஸியோதெரபிஸ்ட்டும், இரண்டு இளநிலை படிப்பு முடித்த இரண்டு பிஸியோதெரபிஸ்ட்களும் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மிளகுபாறையில் உள்ள அரசு பிஸியோதெரபிஸ்ட் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 8ம் தேதி ஆர்ப்பாட்டமும், 9ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற 5 மாணவிகள் மயக்கம் அடைந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், "தமிழ்நாடு பிஸியோதெரபி கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என, தமிழக சுகாதாரம் மற்றும் கிராம சுகாதார துறை இயக்குனர் பரஞ்ஜோதி, உத்தரவாதம் அளித்தார். அதோடு, பிஸியோதெரபிஸ்ட்கள் குறித்து கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று மதியம் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து, வகுப்புகளுக்கு திரும்பினர். இதனால், சில நாட்களாக பிசியோதெரபிஸ்ட் மாணவர்களிடையே நிலவிய பரபரப்பும், அச்சமும் நீங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்