கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை
கோவை : "கோவையில் 520 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள், 75 சதவீதம் முடிந்து விட்டன. 2014ம் கல்வியாண்டில் இம்மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கும். டில்லி "எய்ம்ஸ்" மருத்துவமனையின் தரத்துடன் இம்மருத்துவமனை செயல்படும்," என்று, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு இணை அமைச்சர் கோடிகுன்னில் சுரேஷ் தெரிவித்தார். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த, இ.எஸ்.ஐ., பி.எப்., மற்றும் கணிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் செயல்பாட்டு திட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று கோவையில் நடந்தது. இதில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் கோடிகுன்னில் சுரேஷ் தலைமையேற்று, கடந்த ஆண்டுகளின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், புதிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக திருப்பூர், ஸ்ரீ பெரும்புதூர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் விரைவில் துவங்க உள்ளது. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 100 கோடி ரூபாய் என மொத்தம் 400 கோடி ரூபாய் செலவிடப்படும். கோவை மற்றும் சென்னையில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளில் கட்டுமானப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சென்னையில் 400 கோடி ரூபாய் கட்டுமானப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது முடிந்துள்ளது. கோவையில் 520 கோடி ரூபாய் செலவில் நடந்து வந்த கட்டுமான பணிகள், தற்போது 75 சதவீதம் முடிந்துள்ளது. வரும் 2014ம் கல்வியாண்டில் இரு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். டில்லி "எய்ம்ஸ்" மருத்துவமனையின் தரத்துடன் செயல்படும். தமிழகத்தை பொறுத்த அளவில் 28 மாவட்டங்களில் இ.எஸ்.ஐ., திட்டம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் துவங்க செயல் பணிகள் நடந்து வருகிறது. அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் செயல்படுத்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசு செயல்பாடுகளை துவங்க தயாராக உள்ளது. கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 18 மாவட்டங்களில் 29 ஆயிரத்து 996 நிறுவனங்கள் பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன் கீழ், 40 லட்சம் பணியாளர்கள் பயன்பெறுகின்றனர். கணிம வளத்துறை தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. சுரங்க பணிகளில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.