உள்ளூர் செய்திகள்

ஹரப்பா நாகரிகத்துக்கு தமிழகம்தான் தாயகம் என தெரிய வந்துள்ளது: ஆய்வாளர்

சென்னை: ஹரப்பா நாகரிகத்துக்கு, தமிழகம்தான் தாயகம் என, தெரிய வந்துள்ளது. தமிழ் பண்பாட்டுக்கு, இலக்கியமும் ஒரு சான்றாக உள்ளது என, தொல்பொருள் ஆய்வாளர் நடன காசிநாதன் கூறினார். சென்னை பல்கலையின், தொன்மை வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தமிழ் செம்மொழி நிறுவனம் ஆகியன இணைந்து, தமிழ் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியத்தில், தமிழர்களின் கலை, இலக்கிய பண்பாட்டு பதிவுகள் என்ற கருத்தரங்கை நடத்தின. இதில், நடன காசிநாதன் பேசியதாவது: இலக்கியங்கள் பெரும்பாலும், உண்மை நிகழ்வை கூட்டிச் சொல்வதாகவும், கற்பனைகள் நிறைந்ததாகவும் உள்ளன. அவற்றை, வரலாற்று ஆதாரமாக ஏற்க முடியாது என்ற கருத்து, பரவலாக உள்ளது. ஆனால், தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும், பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில், சில கற்பனை சேர்ந்து இருந்தாலும், அவை அனைத்தையும் ஆதாரமற்றவை என, ஒதுக்கிவிட முடியாது. பெரிய புராணத்தில், நின்ற சீர் நெடுமாற பாண்டியன் குறித்த குறிப்புகள் உள்ளன. இதே குறிப்புகள், மதுரை அருகே அண்மையில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள், கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல சம்பவங்கள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளிலும் ஒத்து உள்ளன. கொற்கை பாண்டியனின் நாணயங்கள் குறித்து, தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 18 வகையான மொழிகள் இருந்தன. இவை, முந்தைய காலத்தில், குறி வடிவில் இருந்தன. பிந்தைய காலத்தில், எழுத்து வடிவாக மாறின. இதற்கான ஆதாரங்கள் பல, தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள், ஹரப்பா நாகரிகத்துடன் ஒத்துள்ளன. தமிழகத்தில் வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள், வெண்கல பாத்திரங்கள், கட்டடக் கலை, சித்திரம் போன்றவை, ஹரப்பாவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹரப்பா நாகரிகத்துக்கு, தமிழகம்தான் தாயகம் என, தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வாளர் வெங்கடேசன் பேசியதாவது: தொடர் தொல்பொருள் ஆய்வுகள் மூலம், முந்தைய கால பண்பாடு, நாகரிகம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு, இளைஞர்கள் பெருமளவில் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்