மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவியர் கடும் அவதி
பெரம்பூர்: பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில், கட்டுமான பணிகள் முறையாக நடக்காததால், அடிப்படை வசதிகள் இன்றி மாணவியர் கடும் அவதிப்படுகின்றனர். திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு, 70க்கு உட்பட்ட, பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலை பள்ளி சாலையில், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 96 வகுப்பறைகள் உள்ளன; 3,000 பேர் படிக்கின்றனர். அலங்கோலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் கட்டுமான பணிகள் நடந்தன. வகுப்பறைகளில் டைல்ஸ் அரைகுறையாக பதிக்கப்பட்டதால், பெரும் பாலான வகுப்பறைகள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. கழிப்பறை குழாய் உடைந்துள்ளதால், பள்ளிக்கு வெளிப்புறம் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. தரமற்ற குழாய் அமைக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. வகுப்பறைகளுக்கு, கதவுகள் சரிவர பொருத்தப்படவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், இணைப்பு கொடுக்கப்படாததால் இயந்திரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாணவியர், குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். அரைகுறை பணி பள்ளிக்கு, இரவுநேர காவலாளி கிடையாது. இதனால், அடிக்கடி பள்ளியில் திருட்டு நடக்கிறது. கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அலங்கோலமாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகளை மேற்கொண்டவர்கள், தரமற்ற பொருட்களை கொண்டும், பணிகளை அரைகுறையாகவும் செய்துள்ளதால், மாணவியர் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, மாநகராட்சி மறுஒப்பந்தம் விட்டு, அனைத்து பணிகளையும் தரமான முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.