உள்ளூர் செய்திகள்

உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை!

பழநி: ஆயக்குடியை சேர்ந்த வேங்கைநாதன் மலேசியாவில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்த விவசாயி மதிமன்னன் மகன் வேங்கைநாதன், 25. டிப்ளமோ சிவில் முடித்தவர். கோவை பயிற்சி பள்ளியில் சிலம்பம் கற்றார். மாவட்ட, மாநில போட்டிகளில் வென்று இந்திய தற்காப்புகலை மற்றும் விளையாட்டு ஆணையம் மூலம் மலேசியாவில் பிப்.,5 முதல் பிப்.,8வரை நடந்த 3வது உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். 61-70 கிலோ எடை பிரிவில் மகடு(மான்கொம்பு), வாள்வீச்சு ஆகியவற்றில் தங்கமும் ஒற்றை கம்புவீச்சு, சுருள் வாள்வீச்சு, வேல்கம்பு வீச்சில் வெண்கலமும் வென்றார். வேங்கைநாதன் கூறுகையில், "அப்பா விவசாய கூலி. பணப் பிரச்னையால் ஆசிய, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. ஏற்கனவே 2013, 2014ல் உலக போட்டிக்கு தகுதிபெற்றும் பணமின்றி பங்கேற்கவில்லை. இம்முறை நண்பர்கள், கோவை பயிற்சியாளர் சுதாகர் ரூ.42 ஆயிரம் தந்து உதவினர். இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சீனா, உஸ்பெஸ்கிஸ்தான் உள்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்