இ - சேவை மையங்களில் அரசு பணிகளுக்கு விண்ணப்பம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அரசு இ - சேவை மையங்களில், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம், இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை உள்ளிட்ட வசதிகளை பெறலாம். இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக, நிரந்தர பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, 5 ரூபாய், விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகவலை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.