பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை கருத்து சேகரிக்கும் பணி துவக்கம்
மாதிரி பாடத் திட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், ஆக்கபூர்வமான கருத்துக்கள் புதிய பாடத்திட்ட வடிவமைப்பில் இடம் பெறும் என, தெரிகிறது. தமிழகத்தில் தற்போது நான்கு கல்வி முறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்வி முறையிலும் உள்ள நல்ல விஷயங்களை சேர்த்து சமச்சீர் கல்வி முறை உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கான மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கும் பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளன. மாதிரி பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றவுடன், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் புதிய புத்தகங்கள் அச்சிடப்படவுள்ளன. இந்நிலையில், சமச்சீர் கல்வி, தற்போதைய கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றி கல்வி நிறுவனங்களின் கருத்துக்கள் கேட்டறியும் பணி நடந்து வருகிறது. சமச்சீர் பாடத்திட்டத்தை ஆதரிக்கிறீர்களா, எதிர்ப்பதாக இருந்தால் அதற்கான காரணம் என்ன, பாடத் திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஏதாவது ஆலோசனைகள் உள்ளதா, சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டால் பள்ளிகளின் கற்பிக்கும் முறை, வேலை நாட்கள் உள்ளிட்டவை பாதிப்புக்கு உள்ளாகும் என, கருதுகிறீர்களா ஆகிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடத்தப்படும் தேர்வுகளுக்கு பொது கேள்வித்தாள் முறை அமல்படுத்துவதை ஆதரிக்கிறீர்களா, மாணவர்களை கட்டாயமாக தேர்ச்சி பெற வைப்பதை ஆதரிக்கிறீர்களா, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் கிரேடு முறையில் தரம் பிரிக்கலாமா, என்பன உள்ளிட்ட 16 கேள்விகள் அடங்கிய இந்த கருத்து சேகரிப்பு படிவம், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இன்னும் சில நாட்களில் சமச்சீர் கல்வியின் மாதிரி பாடத்திட்டம் வெளியாகவுள்ள நிலையில், இத்திட்டத்தில் எந்த குறைகளும் இருக்கக் கூடாது என்பதில் அரசு மிக கவனமாக உள்ளது. அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளும் பெற்ற பின்னரே, நிஜமான பாடத்திட்டம் தயாரிக்கும் பணி துவங்கும்.ஆசிரியர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்களிடம் சேகரிக்கப்படும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் புதிய பாடத்திட்ட வடிவமைப்பில் புகுத்தப்படும் என்றார்.