உள்ளூர் செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

குரோம்பேட்டை, புருஷாத்தமன் நகரில் சி.இ.எஸ்., நடுநிலைப் பள்ளி கடந்த 1973ம் ஆண்டில் இருந்து செயல் பட்டு வருகிறது. அஸ்தினா புரம், நடராஜபுரம், சத்தியவாணி முத்து நகர், அண்ணா நகர், புருஷோத்தமன் நகர், பாரதிபுரம், வெங்கட்ராமன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் உட்பட 15 பேர் பணியில் இருந்தனர். சமீபத்தில் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றார். இடைநிலை ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதனால், குழந்தைகளின் கல்வி பாதிப்பதாகவும், பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து புருஷோத்தமன் நகர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், புருஷோத்தமன் நகர் நலச்சங்கம் சார்பில் பள்ளிக்கு 19 கிரவுண்ட் இடம் வழங்கப்பட்டது.இங்கு துவங்கப்பட்ட சி.இ.எஸ்., நடுநிலைப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் 700 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதும், குடிநீர், கழிவறை வசதிகள் சரியாக இல்லாததும் உண்மை தான். இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஆசிரியர்களை நியமனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.  இது குறித்து பள்ளி நிர்வாகி மணிபாரதி கூறுகையில், "பள்ளியில் கழிவறை வசதி சிறப்பாக உள்ளது. நகர் முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், பள்ளிக்கு லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, தொட்டியில் நிரப்பி, குழந்தைகளுக்கு வழங்கப் படுகிறது. தலைமையாசிரியர் பணி யிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஒரு ஆசிரியரை நியமிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையும் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்