ஆய்வின்றி கட்டடம் பூர்த்தியானதாக சான்றிதழ்; தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், கட்டட பணிகள் பூர்த்தியானதாக சான்றிதழ் அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க, அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பழைய மகாபலிபுரம் சாலையில், 112 ஏக்கர் நிலத்தில் வீடுகளை கட்டி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் விற்பனை செய்தது. கட்டட பணிகள் பூர்த்தியானதாக, சான்றிதழும் வழங்கப்பட்டது.இந்நிலையில், வீடுகளுக்கு செல்ல, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவில்லை என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், குடியிருப்போர் சங்கம் புகார் அளித்தது.&'திருப்போரூர் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி, 2014ல், பணிகள் பூர்த்தியானதற்கான சான்றிதழ் வழங்கி விட்டார்; 2016ல் அமலுக்கு வந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது&' என, ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, புகாரை விசாரிக்க, ஆணையம் மறுத்து விட்டது.இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரித்தது. மூன்று மாதங்களில் புகாரை விசாரித்து முடிவெடுக்கும்படி, ஆணையத்துக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் வழக்கு தொடுத்தது.வழக்கை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: வீடுகள் கட்டுமான திட்டம் பூர்த்தியாகி விட்டது என்றால், அனைத்து பணிகளும் முடிந்து, வாங்கியவர்களிடம் வீடுகளை ஒப்படைத்து, அசல் ஆவணங்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின், உரிமையாளர்களின் அனுமதி பெற்றே, பில்டர் உள்ளே வர முடியும்.ரியல் எஸ்டேட் துறையில், மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. இதை மையமாக வைத்து, குற்றங்கள் பல பதிவாகி உள்ளன. இந்த துறையில் நிலவும் சூழ்நிலையை கருதி, பார்லிமென்ட் சட்டம் இயற்றியது.ஆய்வுகளை மேற்கொண்ட பின், கட்டடத்திற்கான பூர்த்தி சான்றிதழ் வழங்குவதில்லை; இந்த சான்றிதழ்கள் வாங்கப்படுகின்றன.உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரிகள், பெரும்பாலும் பிரதிபலன் பெற்று, சான்றிதழ்களை வழங்குகின்றனர்.ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க, துறை தலைவர்களுக்கு, அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.எனவே, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் அளித்த புகாரை, ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.